

பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், தனக்கு வழங்கியிருந்த இடைக்கால முன்ஜாமீனை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தயாநிதி மாறன் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி டி.எஸ்.தாகூர் தலைமையிலான அமர்வு முன்னர் மாறன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, "இந்த வழக்கில் ஏற்கெனவே கடந்த 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் மாறனிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது. எனவே, மாறன் இடைக்கால ஜாமீன் ரத்துக்கு தடை விதிக்க வேண்டும்" என்றார்.
இந்த மனு நாளை (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்தார்.
முன்னதாக, நேற்று (திங்கள்கிழமை) பி.எஸ்.என்.எல். தயாநிதி மாறனுக்கு வழங்கியிருந்த இடைக்கால முன்ஜாமீனை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததுடன், அவரை 3 நாட்களில் சிபிஐயிடம் சரணடைய உத்தரவிட்டது.
வழக்கு பின்னணி:
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 323 தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியதாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு தயா நிதி மாறனுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. இதையடுத்து, முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 30-ம் தேதி தயாநிதி மாறன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி ஆர்.சுப்பையா விசாரித்து தயாநிதி மாறனுக்கு 6 வார காலத்துக்கு இடைக்கால முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இந்த முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி, வழக்கின் புலன் விசாரணை அதிகாரி ராஜேஷ் குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் திங்கள்கிழமை தீர்ப்பை கூறுவதாக தெரிவித்தார். அதன்படி, நீதிபதி வைத்தியநாதன் நேற்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
‘‘மனுதாரர், மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக பதவி வகித்தபோது, பிஎஸ்என்எல் நிறுவன அதிகாரிகளுடன் இணைந்து தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். இதன் மூலம் அரசுக்கு மிகப் பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை மற்றும் டெல்லியில் உள்ள தனது வீட்டில் மினி தொலைபேசி இணைப் பகங்களை சட்டவிரோதமாக மனு தாரர் நிறுவியுள்ளார். இதன்மூலம், அரசுக்கு ரூ.1.78 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது’’ என சிபிஐ தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தில் கூறியுள்ளார்.
இதனால் அவருக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீன் ரத்து செய்யப் படுகிறது. மனுதாரர் சரணடைய அவகாசம் வேண்டும் என அவரது வழக்கறிஞர் கோரியுள்ளார். அவரது வேண்டுகோளை ஏற்று, மனுதாரர் சரணடைய 3 நாட்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது. வரும் 13-ம் தேதி மாலை 4.30 மணிக்குள் மனுதாரர் சரணடைய வேண்டும்.
இவ்வாறு நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தனக்கு வழங்கியிருந்த இடைக்கால முன்ஜாமீனை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை எதிர்த்து தயாநிதி மாறன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.