Published : 02 Jun 2020 07:10 AM
Last Updated : 02 Jun 2020 07:10 AM

11-ம் வகுப்பு மாணவி தேர்வெழுத தனி படகு ஏற்பாடு செய்த கேரள அரசு

கேரளாவில் 11-ம் வகுப்பு மாணவி தேர்வெழுத இயக்கப்பட்ட தனி படகு.

ஆலப்புழா:

கரோனா வைரஸ் பரவி வருவதால் கேரளாவில் பெரும்பாலான இடங்களில் படகு் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா வைரஸ் பரவுவதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 11-ம் வகுப்பு தேர்வுகள் கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றன. இந்நிலையில் ஆலப்புழா மாவட்டம் ராம்சர் பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி சான்ட்ரா பாபு (17) கோட்டயம் மாவட்டத்துக்குச் சென்று தேர்வெழுத வேண்டியிருந்தது.

அந்தப் பகுதியில் படகு சேவை நிறுத்தப்பட்டதால் அவரால் தேர்வுக்குச் செல்ல முடியாத நிலை இருந்தது. இதைத் தொடர்ந்து சான்ட்ரா பாபு, மாநில நீர்ப் போக்குவரத்து துறை (எஸ்டபிள்யூடிடி) அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு உதவுமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி மாணவி சான்ட்ரா பாபுவுக்காக தனி படகுச் சேவையை அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர்.

இதுகுறித்து சான்ட்ரா பாபு கூறும்போது, “படகு சேவை இல்லாததால் நான் தேர்வு எழுத முடியாது என்று நினைத்தேன். ஆனால் எஸ்டபிள்யூடிடி அதிகாரிகள் எனக்கு உதவினர். அவர்களுக்கு எனது நன்றி. என்னுடைய மகிழ்ச்சியை எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை” என்றார்.

இதுகுறித்து எஸ்டபிள்யூடிடி இயக்குநர் ஷாஜி வி நாயர் கூறும்போது, “மாணவி ஒருவருக்காக மட்டும் 70 பேர் செல்லக் கூடிய படகு ஒன்றை ஏற்பாடு செய்தோம். அதில் படகை இயக்கும் ஊழியர்கள் உட்பட 5 பேர் இருந்தனர். வெள்ளி, சனி இரு நாட்களிலும் அவருக்காக படகு இயக்கப்பட்டது” என்றார்.

எஸ்டபிள்யூடிடி அதிகாரி சந்தோஷ்குமார் கூறும்போது, “இதுபோன்ற இன்ஜின் உள்ள படகை தனியாக வாடகைக்கு எடுக்கும் போது ஒரு டிரிப்புக்கு ரூ.4 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் சான்ட்ரா பாபுவிடம் ரூ.18 மட்டுமே வசூலித்தோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x