Published : 02 Jun 2020 06:26 AM
Last Updated : 02 Jun 2020 06:26 AM

விமானங்களில் நடு இருக்கையை காலியாக விட அறிவுரை

உள்நாட்டு விமானங்களில் 3 இருக்கைகள் கொண்ட வரிசையில், நடுவில் உள்ள இருக்கையை காலியாக விடுமாறு டிஜிசிஏ அறிவுறுத்தி உள்ளது.

முன்னதாக நடு இருக்கையை காலியாக விட்டால், பயணிகள் கட்டணம் அதிகரிக்கும் என்பதால் அவ்விதம் வலியுறுத்த வேண்டாம் என அரசு தெரிவித்திருந்தது.

ஒருவேளை நடு இருக்கையில் பயணிகளை அனுமதித்தால் அந்த பயணிக்கு கூடுதல் பாதுகாப்பு கவசங்களை, அதாவது அவர் உடல் முழுவதும் சுற்றப்பட்ட பாதுகாப்பு உடைகளை (மத்திய ஜவுளி அமைச்சகம் பரிந்துரைத்த தரத்தில்) வழங்க வேண்டும். மேலும் முகத்துக்கு கவசமும், முழுமையான முகமூடியும் அளிக்க வேண்டும் என்று டிஜிசிஏ இயக்குநர் ஜெனரல் மத்திய விமான போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

உச்ச நீதிமன்றம் தனது சமீபத்திய உத்தரவில், விமானங்களில் நடுப்பகுதி இருக்கையை காலியாக விடுவதன் மூலமே சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியும் என்று தெரிவித்திருந்தது. வர்த்தக ரீதியில் விமானங்களை இயக்கும் நிறுவனங்களின் வணிக நோக்கத்தைக் காட்டிலும் நாட்டு மக்களின் சுகாதாரம் மிகவும் முக்கியம் என்பதை அரசு உணர வேண்டும் என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

பொதுவாக ஆறு அடி இடைவெளி இருக்க வேண்டும் என்று கரோனா பரவலைத் தடுக்க மேற்கொள்ள வேண்டிய சமூக இடைவெளி குறித்து வலியுறுத்தப்படுகிறது. ஆனால் விமானங்களில் ஒரு பயணிக்கும் மற்றொரு பயணிக்கும் எங்கே 6 அடி இடைவெளி உள்ளது என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்தே கேள்வி எழுப்பியுள்ளார்.

வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்கு பயன்படுத்தப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் மட்டும் நடு இருக்கைகளில் பயணிகள் பயணம் செய்ய ஜூன் 6-ம் தேதி வரை மட்டுமே அவசரம் கருதி பாம்பே உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது. இந்த மனு மீதான விசாரணை மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x