Last Updated : 01 Jun, 2020 03:35 PM

 

Published : 01 Jun 2020 03:35 PM
Last Updated : 01 Jun 2020 03:35 PM

ஐசிஎம்ஆர் மூத்த விஞ்ஞானிக்கு கரோனா; நிதி ஆயோக் அலுவலக ஊழியருக்கும் தொற்று

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி

இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சிலில் (ஐசிஎம்ஆர்) பணியாற்றும் மூத்த விஞ்ஞானி ஒருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, அந்த அலுவலகம் முழுவதும் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கையில், மருத்துவப் பரிசோதனைகளில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் அதில் பணியாற்றும் மூத்த விஞ்ஞானி ஒருவருக்கே கவனக்குறைவால் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.

பெயர் வெளியிடப்படாத இந்த அறிவியல் விஞ்ஞானி மும்பையிலிருந்து டெல்லிக்கு சில நாட்களுக்கு முன் திரும்பியுள்ளார். அதன்பின் கரோனா அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது வைரஸ் இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இந்த விஞ்ஞானி மும்பையில் உள்ள என்ஐஆர்பி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்த விஞ்ஞானிக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஐசிஎம்ஆர் தலைமை அலுவலகம் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட உள்ளது. முக்கிய அதிகாரிகள் மட்டும் தேவை ஏற்பட்டால் அலுவலகத்துக்கு வந்தால் போதுமானது. மற்ற ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இந்த விஞ்ஞானி ஐசிஎம்ஆர் இயக்குநர் மருத்துவர் பல்ராம் பார்கவா உள்ளிட்டோருடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். இதனால் கரோனா தொற்று ஏற்பட்ட விஞ்ஞானியுடன் நெருங்கிப் பழகிய சக ஊழியர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேபோல, டெல்லி நிதி ஆயோக் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கும் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நிதி ஆயோக் அலுவலகத்தின் மூன்றாவது தளம் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிப்பதற்காக சீல் வைத்து மூடப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த வாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் இருவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒருவர் மத்திய ஐரோப்பியப் பிரிவிலும், மற்றொருவர் சர்வதேச சட்ட விவகாரங்கள் பிரிவிலும் பணியாற்றியவர்.

இதையடுத்து அந்த இரு அலுவலர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அலுவலகத்தில் பணியாற்றிய அனைவரும் 14 நாட்கள் சுயதனிமை செய்து கொள்ளவும், வீட்டில் இருந்து பணியாற்றவும் உத்தரவிடப்பட்டு கடந்த 27-ம் தேதி உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x