பிரிவினைவாதிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டாம்: பாகிஸ்தானுக்கு இந்தியா அறிவுரை

பிரிவினைவாதிகளுடன் ஆலோசனை நடத்த வேண்டாம்: பாகிஸ்தானுக்கு இந்தியா அறிவுரை
Updated on
1 min read

இந்தியா - பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுடன் ஆலோசனை நடத்த முயற்சிக்க வேண்டாம் என பாகிஸ்தானை மத்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்தியா - பாகிஸ்தான் நாட்டு வெளி யுறவுத் துறை செயலர்கள் அளவிலான கூட்டம் நடைபெற இருந்தது. அதற்கு முன்னதாக பேச்சுவார்த்தை நடத்த காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுக்கு பாகிஸ்தான் தூதர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து, அந்தக் கூட்டத்தை மத்திய அரசு ரத்து செய்தது.

அதன் பிறகு, இந்தியா - பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் வரும் 23, 24-ம் தேதிகளில் டெல்லியில் நடக்கிறது.

இந்நிலையில், "இந்தியா - பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுடன் ஆலோசனை நடத்த பாகிஸ்தான் முயற்சிக்க வேண்டாம்.

அவ்வாறு சந்திப்பு நேர்ந்தால் அது, ரஷ்யாவின் உஃபா நகரில் பிரதமர் மோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் சந்தித்து பேசியபோது தீவிரவாதத்தை ஒடுக்க இரு நாடுகளும் இணைந்து செயலப்டும் என மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு விரோதமானதாக அமையும்" என மத்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், நடைபெறவுள்ள இந்தியா - பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டத்துக்கான திட்ட வரைவு குறித்த ஒப்புதலை அனுப்புமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.

அமைச்சர் உறுதி:

முன்னதாக நேற்று (வியாழக்கிழமை) நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தொலை தொடர்புத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "தீவிரவாதம், அதை தடுக்கும் வழிகளை பற்றி ஆலோசனை நடத்தி நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். அதற்காகத்தான் இரு நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. இதை சீர்குலைக்கும் வகையில், காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு பாகிஸ்தான் தூதர் அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால், திட்டமிட்டப்படி பாதுகாப்பு ஆலாசகர்கள் கூட்டம் நடக்கும்" எனக் கூறியிருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in