Last Updated : 01 Jun, 2020 01:52 PM

 

Published : 01 Jun 2020 01:52 PM
Last Updated : 01 Jun 2020 01:52 PM

டெல்லி மாநிலத்தின் எல்லைகள் ஒருவாரத்துக்கு சீல் வைப்பு: முதல்வர் கேஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பேட்டி அளித்த காட்சி: படம் | ஏஎன்ஐ.

புதுடெல்லி

டெல்லியில் தொடர்ந்து கரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதையடுத்து, மாநிலத்தின் எல்லைகள் அடுத்த ஒருவாரத்துக்கு சீல் வைக்கப்படுவதாக முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று அறிவித்தார்.

கரோனா வைரஸால் நாட்டில் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. 4-வது கட்ட லாக்டவுன் தொடங்கும்போது ஏராளமான தளர்வுகளை டெல்லி அரசு அறிவித்தபின் மாநிலத்தில் கரோனாவின் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, டெல்லியில் 19 ஆயிரத்து 844 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,478 பேர் குணமடைந்துள்ளனர். ஏறக்குறைய 11 ஆயிரம் பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். 473 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர்.

டெல்லியில் நாளுக்கு நாள் கரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதையடுத்து, டெல்லியிலிருந்து வரும் மக்களால் மற்ற மாநிலங்களிலும் பாதிப்பு அதிகரிக்கிறது. இதனால் உத்தரப் பிரதேசத்துக்கு உட்பட்ட கவுதம்-புத்தநகர் மாவட்ட நிர்வாகம், நொய்டா-டெல்லி நெடுஞ்சாலையை நேற்று மூடி சீல் வைத்தது.

இந்த சூழலில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் நிருபர்களுக்கு காணொலி மூலம் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''டெல்லியில் கரோனா நோய்ப் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஹரியாணா, உத்தரப் பிரதேசம் டெல்லி எல்லைகள் அடுத்த ஒருவாரத்துக்கு மூடி சீல் வைக்கப்படுகிறது. இந்த எல்லைகளை மீண்டும் திறப்பது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்டுள்ளோம்.

அத்தியாவசிய சேவை தேவைப்படுவோர் டெல்லி அரசிடம் முறையான அனுமதிச் சீட்டு பெற்று உத்தரப் பிரதேசம், ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வரலாம்.

ஹரியாணா, உத்தரப் பிரதேசத்தின் எல்லைகளை அடுத்த ஒரு வாரத்துக்குப் பின் திறப்பது குறித்து டெல்லி மக்கள் 88000 07722 என்ற எண்ணில் வாட்ஸ் அப் மூலம் கருத்து தெரிவிக்கலாம். delhicm.suggestions@gmail.com என்ற மின் அஞ்சலிலும் கருத்துகளைத் தெரிவிக்கலாம் அல்லது வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் 1031 என்ற எண்ணுக்கு அழைத்து கருத்தைப் பதிவு செய்யலாம்.

பிற மாநிலங்களில் இருந்து அதிகமானோர் டெல்லிக்குள் நுழைந்து அதிகமான அளவில் மருத்துவ சேவைகளைப் பெறுகிறார்கள். இதனால், டெல்லியைச் சேர்ந்த மக்கள் போதுமான அளவு பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. ஆனால், டெல்லி அரசைப் பொறுத்தவரை மருத்துவமனையில் படுக்கைக்கு எந்தவிதமான பற்றாக்குறையும் இல்லை.

மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளபடி சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளோம். அதன்படி, டெல்லியில் சலூன் கடைகள் திறக்க அனுமதிக்கப்படும். ஆனால், ஸ்பா அனுமதிக்கப்படாது. அனைத்துக் கடைகளும் திறக்கப்படலாம். எந்தவிதமான தடையும் இல்லை. இரு சக்கர வாகனங்கள், கார்களில் பயணிகள் பயணிப்பதிலும் கட்டுப்பாடு இல்லை''.

இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x