

கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் வரி வருவாய் குறைந்து மாநில அரசுகள் சிக்கலில் இருக்கும் நிலையில், வரும் 14-ம் தேதி 40-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்பட வாய்ப்பிருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் காணொலி மூலம் நடத்தப்படும். அனைத்து மாநிலங்களின் நிதியமைச்சர்கள், மத்திய நிதியமைச்சர், மத்திய அரசு உயரதிகாரிகள் அனைவரும் காணொலி மூலம் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.
கரோனா வைரஸ் லாக்டவுனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு, மாநிலங்களுக்கு ஏற்பட்ட வரி வருவாய் இழப்பு ஆகியவை குறித்து 40-வது ஜிஎஸ்டி கவுன்சில் குழுக்கூட்டத்தில் பேசப்படலாம் எனத் தெரிகிறது.
வருவாயைப் பெருக்க அத்தியாவசியமில்லாத பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி உயர்த்தப்படலாம் என்ற பேச்சு எழுந்தாலும், ஏற்கெனவே நாட்டில் தேவை, நுகர்வு குறைந்துள்ள நிலையில் வரியை உயர்த்தினால் மேலும் நுகர்வு பாதிக்கும் என்பதால் வரி உயர்த்த வாய்ப்பில்லை. பொருளாதாரத்தின் வளர்ச்சியை மேலும் பாதிக்கும் என்பதால் வாய்ப்பிருக்காது எனத் தெரிகிறது.
மேலும், மாநிலங்களுக்கு வரி வருவாய் குறைந்திருப்பதால் வருவாயை அதிகரிப்பதற்கான வழியாக புதிதாக செஸ் விதிப்பது குறித்தும் இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. நாட்டில் லாக்டவுன் காரணமாக கடந்த இரு மாதங்களாக பல தொழில்கள், நிறுவனங்கள் முடங்கியதால் நுகர்வு குறைந்துள்ளதால், புதிதாக வரியோ அல்லது வரியை உயர்த்தவோ வாய்ப்பில்லை என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.