

அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதால் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை மையம் வழங்கியுள்ளது.
ஜூன் 4-ம் தேதி வரை மீனவர்கள் யாரும் அரபிக் கடலின் குஜராத்தை ஒட்டிய வடக்கு மற்றும் தெற்குப் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என்றும் அரபிக் கடலில் மீன் பிடிக்கச் சென்றிருக்கும் மீனவர்கள் கரை திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை மையத்தின் புயல் எச்சரிக்கைப் பிரிவு வெளியிட்ட அறிவிப்பில், “தற்போது அரபிக்கடலில்ன் மத்திய கிழக்குப் பகுதியிலும் லட்சத்தீவுகளிலும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இருக்கிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி, அடுத்த 24 மணி நேரத்தில் புயலாகவும் மாறலாம்.
ஜூன் 2-ம் தேதி இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடக்கு நோக்கி நகர்ந்தும், அதன்பின் வடக்கிலிருந்து கிழக்காகவும் நகர்ந்து மகாராஷ்டிராவின் வடக்குப் பகுதிகளையும், குஜராத்தின் தெற்குப் பகுதியையும் ஜூன் 3-ம் தேதி அடையலாம். இதனால் மகாராஷ்டிரா, குஜராத்் கடற்கரைப் பகுதிகளில் பலத்த காற்று, மிக மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
கேரளா, கர்நாடக மாநிலத்தின் கடற்கரை மாவட்டங்கள், கோவா ஆகியவற்றுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கிறோம். குஜராத், மகாராஷ்டிரா கடற்கரைப் பகுதிகளுக்கு சிவப்பு நிற எச்சரிக்கையை 3-ம் தேதி முதல் விடுக்கப்படுகிறது. மகாராஷ்டிராவின் கடற்கரை மாவட்டங்கள், குஜராத், கோவா ஆகியவற்றுக்கு வரும் 4-ம் தேதி சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளது.
குஜராத்தில் உள்ள அகமதாபாத் வானிலை மையம் விடுத்துள்ள அறிவி்ப்பில், ''குஜராத்தின் வடக்கு, தெற்கு கடற்கரைப் பகுதியில் முதல் எண் புயல் கூண்டு சின்னம் ஏற்றப்பட்டுள்ளது. கடல் மிக மிக ஆக்ரோஷமாக இருக்கும். ஜூன் 4-ம் தேதி காற்று அதிகபட்சமாக 110 கி.மீ. வேகத்தில் வீசலாம் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம். மேற்கு மத்திய அரபிக் கடல், தெற்கு ஓமன் கடல், ஏமன் கடற்பகுதிக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்'' எனத் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே அரபிக் கடலில் உருவாகியிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தீவிர புயலாக மாறி மகாராஷ்டிராவின் வடக்கு மற்றும் குஜராத்தின் தெற்குப் பகுதியில் கடக்கலாம். இதனால் மும்பையில் பாதிப்பு ஏற்படலாம் என இந்திய வானிலை மையம் இன்று விடுத்துள்ள எச்சரிக்கையில் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே கரோனா வைரஸ் பிரச்சினையில் சிக்கி மும்பை மாநகரம் சீரழிந்து வரும் நிலையில் இப்போது புயல் தாக்கினால் பெரும் பாதிப்பு ஏற்படும்.
இன்று மாலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி 3-வது மற்றும் 4-வது கட்டப் புயலாக மாற வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்தப் புயல் பெரும்பாலும் வடக்கு நோக்கி ஜூன் 2-ம் தேதி நகர்ந்து, அங்கிருந்து வடகிழக்காக நகர்ந்து, மகாராஷ்டிராவின் வடக்கு மற்றும் குஜராத்தின் தெற்கு கடற்கரைப் பகுதியான ஹரிஹரேஸ்வர், டாமன் பகுதியை ஜூன் 3-ம் தேதி அடையும்.
இதன் காரணமாக ராய்காட், டாமன், மும்பை , நவி மும்பை, பன்வேல், கல்யான், டோம்பிவாலி, மிரா, பாயாந்தர், வாசி, விரார், உல்ஹாஸ்நகர், பாதல்பூர், அம்பர்நாத் ஆகிய பகுதிகளில் மிக மிக கனமழை பெய்யக்கூடும். ஜூன் 3-ம் தேதி இந்தப் புயல் கரையைக் கடக்கும்போது கடற்கரைப் பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்” என எச்சரித்துள்ளது.