

வடக்கு எல்லையில் நடந்ததாகக் காட்டப்படும் வீடியோ ஒன்று பொய்யானது, விஷமமானது, அதை நம்ப வேண்டாம் என்று இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.
தேதியிடப்படாத இந்த வீடியோவில் சீன ராணுவ வீரர் ஒருவரை இந்திய ராணுவ வீரர்கள் போல் தோற்றம் கொண்ட சிலர் தாக்குவது போலவும், அவரது ராணுவ வாகனம் தாக்கப்படுவது போலவும் பதிவு செய்யப்பட்டிருந்தது, இது சமூகவலைத்தளங்களில் வைரலானது.
ஆனால் இந்த வீடியோ பொய் என்று கூறும் இந்திய ராணுவ அதிகாரிகள் கூறும்போது, ‘சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது என்ற விவரம் எங்கள் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. இந்த வீடியோவின் உள்ளடக்கங்கள் உண்மை கிடையாது. இந்த வீடியோவை வைத்து வடக்கு எல்லைகளில் நிலவரங்களை எடைபோடுவது தீங்கானது. தற்போது இங்கு எந்த ஒரு வன்முறையும் இல்லை.
வேறுபாடுகள் முரண்கள் ராணுவ கமாண்டர்கள் உரையாடல் மூலம் தீர்க்கப்படுகின்றன. இருநாடுகளுக்கு மிடையே உள்ள நிறுவப்பட்ட உடன்படிக்கைகள் அடிப்படையில் அனைத்தும் சுமுகமாக உள்ளன. தேசியப் பாதுகாப்பு குறித்த விவகாரத்தில் இப்படிப் பொறுப்பற்ற முறையில் பரபரப்பு விரும்பிகளாக செய்தியைப் பரப்புவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்’ என்று இந்திய ராணுவம் தரப்பில் அதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.