

கரோனா நிவாரணத்திற்காக உருவாக்கப்பட்ட பிஎம் கேர்ஸ் என்ற பிரத்யேக நிவாரண நிதியம் ‘பப்ளிக் அதாரிட்டி’ அல்ல எனவே ஆரிடிஐ சட்டத்தின் கீழ் வராது என்று கூறி ஆர்டிஐ விண்ணப்பதாரர் ஒருவர் கேட்டிருந்த விவரங்களை அளிக்க பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது.
பிரதமரின் அவசரகாலச் சூழ்நிலை குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண நிதியம் (PM CARES) என்பது கோவிட்-19 வைரஸ் அனைத்துலக மக்கள் பெருந்தொற்று காலத்தில் நிவாரணத்துக்காக நன்கொடை பெற தொடங்கப்பட்டது. மார்ச் 28ம் தேதி இதனை அறிமுகம் செய்வதாக பிரதமர் தன் ட்விட்டர் கணக்கில் தெரிவித்த சில நாட்களிலேயே ஸ்ரீ ஹர்ஷா கந்துகுரி என்பவர் ஆர்டிஐ சட்டத்தின் கீழ் நிதியத்தின் உடன்படிக்கை பத்திரம், அனைத்து அரசு உத்தரவுகள், அறிவிக்கைகள், சுற்றறிக்கைகள், ஆகியவற்றை அளிக்க வேண்டும் என்று விண்ணப்பம் செய்திருந்தார்.
பெங்களூரு அஸிம் பிரேம்ஜி பல்கலைக் கழகத்தில் சட்ட மாணவரான கந்துகுரி, “பிரதமர் தேசிய நிவாரண நிதியம் ஏற்கெனவே இருக்கும் போது பிஎம் கேர்ஸ் என்பதை உருவாக்குவது அர்த்தமுள்ளதாக எனக்குத் தெரியவில்லை. இந்த நிதியத்தின் உருவாக்கம் குறிக்கோள்கள் பற்றி ஆர்வமாக இருந்தேன். நிதியத்தின் ஒப்பந்த அறிக்கையை வாசிக்க ஆசைப்பட்டேன்” என்றார்.
ஆனால் இவரது விண்ணப்பத்துக்கு 30 நாட்களாக எந்த ஒரு பதிலும் அளிக்கப்படவில்லை. மேல்முறையீடு செய்தார், இதனையடுத்து பிரதமர் அலுவலகத்தின் தகவல் அதிகாரி பதில் அனுப்பியுள்ளார்.
அதில், “பிஎம் கேர்ஸ் நிதியம் தகவலுரிமை சட்டம், 2005 பிரிவு 2 ஹெச்-ன் படி பொது அதிகாரத்தின் கீழ் வராது. இது தொடர்பான விவரங்களை pmcares.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டு விவரங்களை அளிக்க மறுத்துள்ளது.
ஆனால் பொது அதிகாரம் என்பது ஆர்டிஐ சட்டத்தில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் எந்த ஒரு அமைப்போ, அரசோ, அரசு சாராததோ எதுவாக இருந்தாலும் நிதி பெறுவது அல்லது அரசிடமிருந்து நிதி பெறுவது, அரசு அல்லது அரசுசாராத அமைப்பு நிதி அளிப்பது என்று எதுவாக இருந்தாலும் அது பொது அதிகாரத்தின் கீழ்தான் வருகிறது என்று கூறப்பட்டுள்ளதாகக் கூறும் சட்ட மாணவர் கந்துகுரி “நிதியத்தின் பெயர், அமைப்பின் கட்டமைப்பு, கட்டுப்பாடு, சின்னத்தின் பயன்பாடு, அரசு பண்புரிமைப் பெயர் போன்று அனைத்தும் இது பொது அதிகாரத்தின் கீழ்தான் வருகிறது என்பதையே காட்டுகிறது” என்றார்.
ஆகவே தான் மேல்முறையீடு செய்யப்போவதாக அவர் தெரிவித்தார். பிரதமரே இதன் சேர்மன், 3 அமைச்சர்கள் பொறுப்பாளர்கள் என்று பதவி வகிக்கின்றனர். எனவே அரசு முழுதும் இதன் மீது கட்டுப்பாடு செலுத்துவதால் இது பொது அதிகாரத்தின் கீழ் வருகிறது என்பதையே காட்டுவதாக கந்துகுரி தெரிவித்துள்ளார்.
இது மட்டுமல்ல பிரதமர் தேசிய நிவாரண நிதியம் பொது அதிகாரத்தின் கீழ் வருகிறதா என்பதிலும் முரண்பட்ட கருத்துக்களே நிலவுகின்றன.