

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் இரண்டாம் முறையாக கடந்தஆண்டு மே 30-ம் தேதி பதவியேற்றது. இந்த அரசு நேற்று ஓராண்டை நிறைவு செய்தது.
இதையொட்டி பாஜக தலைவர்ஜே.பி. நட்டா நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கரோனா வைரஸ் தாக்குதலை சமாளிக்க முடியாமல் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த பல நாடுகள் தவித்த நிலையில், இந்தியாவில் கரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் இருந்தது. சரியான நேரத்தில் ஊரடங்கு முடிவை மத்திய அரசுஎடுத்தது. கரோனா வைரஸ் பரவுவதை இது தடுக்க உதவியது.
குடியுரிமை திருத்த சட்டம், ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவு நீக்கம், தீவிரவாத எதிர்ப்பு சட்டங்களை வலுப்படுத்தியது, வங்கிகள்இணைப்பு போன்றவை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுக்காக துணிச்சலுடன் எடுக்கப்பட்ட முடிவுகள் நாட்டை வலுப்படுத்தவும் ஒரே நாடு, ஒரு அரசியலமைப்பு சட்டம் என்ற குறிக்கோளை அடையவும் உதவியுள்ளன.
அயோத்தி வழக்கை காங்கிரஸ் கட்சி நீண்ட காலமாக தாமதப்படுத்தி வந்தது. தற்போது அங்கு மிகப்பெரிய ராமர் கோயில் கட்ட அறக்கட்டளை அமைக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
மத்தியில் 2-வது முறையாக மோடி அரசு பதவியேற்று ஓராண்டை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு நாடு முழுவதும்பாஜக சார்பில் டிஜிட்டல் கூட்டங்கள் நடத்தப்படும்.
இவ்வாறு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கூறினார்.