

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக பதவியேற்று நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இந்நிலையில் மத்திய அரசை காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
காங்கிரஸ் கட்சியின் சார்பில்‘உதவியற்ற மக்கள். இதயமற்ற அரசு’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், "கடந்த ஓராண்டு ஆட்சியில் மக்கள் ஏமாற்றமும் மோசமான நிர்வாகத்தால் மிகுந்த வேதனையும் அடைந்துள்ளனர். ஆண்டுக்கு 2 கோடி பேருக்குவேலை அளிக்கப்படும் என்று பிரதமர் மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால், வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கிறது. கரோனா வைரஸ் பாதிப்புக்கு பிறகு 27 சதவீதமாக அதிகரித்துள்ளது" என்று தெரிவித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி வெளியிட்ட அறிக்கையில், "நாட்டில் 130 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் ஏழைகள். அவர்களின் நலனில் அரசு அக்கறை காட்டவில்லை.பிரச்சினைகளை மூடி மறைக்காமல் அவற்றுக்கு தீர்வு காண வேண்டும்" என்று கூறியுள்ளார்.