

நாடு முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. இதில், மகாராஷ்டிரா, தமிழ்நாடுக்கு அடுத்தபடியாக டெல்லி 3-வது இடத்தில் உள்ளது. அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 ஆயிரத்தைத் தாண்டிவிட்டது. இதுகுறித்து டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று கூறியதாவது:
டெல்லியில் கரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அச்சமடையத் தேவையில்லை. உயிரிழப்பு அதிகரித்தாலோ அல்லது மருத்துவமனை வசதி குறைவாக இருந்தாலோதான் கவலைப்பட வேண்டும். மேலும் கரோனா பாதிப்பு உள்ளவர்களில் பெரும்பாலானோருக்கு குறைவான பாதிப்பு அல்லது அறிகுறியே இல்லை. எனவே, அவர்கள் தங்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு குணமடைந்து வருகிறார்கள்.
அதேநேரம் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர ஊரடங்கு என்பது தீர்வாகாது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் தொடர்ந்து நாம் இயங்க வேண்டும். கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.