Published : 30 May 2020 06:24 AM
Last Updated : 30 May 2020 06:24 AM

இரண்டாவது முறை பிரதமராக பதவியேற்று ஓராண்டு நிறைவு; பொருளாதாரத்தில் முன்னேற சுயசார்புதான் ஒரே வழி: நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு

‘‘இந்தியா பொருளாதாரத்தில் முன்னேற சுயசார்புதான் ஒரே வழி. கடின உழைப்பின் மூலம் சுயசார்பை நோக்கிய பயணத்தைத் தொடங்க வேண்டும்’’ என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு மே 30-ம் தேதி நரேந்திர மோடி 2-வது முறையாக பிரதமராக பதவியேற்றார். அவர்பதவியேற்று நேற்றுடன் ஓராண்டுநிறைவு பெற்றது. இரண்டாவது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு மோடி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

கடந்த ஆண்டு இதே நாளில் இந்திய வரலாற்றில் பொன்னான ஓர் அத்தியாயம் தொடங்கியது. இதற்காக இந்தியாவின் 130 கோடி மக்களுக்கும் தலை வணங்குகிறேன். உலகை உலுக்கி வரும்கரோனா வைரஸ் நமது நாட்டையும் பீடித்துள்ளது. உலகின் வல்லமையான, வளமை மிகுந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் கூட்டு பலத்துக்கும், செயல் திறனுக்கும் இணை ஏதும் இல்லை என்பதை நீங்கள் நிரூபித்திருக்கிறீர்கள்.

நமது தொழிலாளர்கள், கைவினைஞர்கள், சிறு தொழில் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள், சாலையோர வியாபாரிகளுக்கு எண்ணற்ற துன்பங்கள் நிகழ்ந்திருக்கின்றன. எனினும் நமது பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நாம் ஒன்றுபட்டு உறுதியுடன் செயல்பட்டு வருகிறோம்.

இப்போது நாம் எதிர்கொள்ளும் பாதிப்புகள் பேரழிவாக மாறிவிடாமல் இருப்பதை உறுதி செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். அனைத்து விதிகள், வழிகாட்டுதல்களையும் ஒவ்வொரு இந்தியரும் பின்பற்ற வேண்டும். நாம் வெற்றியின் பாதையில் செல்லத் தொடங்கி உள்ளோம்.

பொருளாதாரத்தைப் பொறுத்த வரையில், 130 கோடி இந்தியர்களும் தங்களுடைய பலத்தின் மூலம், உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்துவார்கள். நாம் சுயசார்பாக மாற வேண்டியது காலத்தின் கட்டாயம். பொருளாதாரத்தில் முன்னேறிச் செல்ல சுயசார்பு இந்தியா என்ற ஒரே வழிதான் இருக்கிறது. இதற்காக ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

புதிய வாய்ப்புகள்

இதன்மூலம் விவசாயிகள், தொழிலாளர்கள், சிறுதொழில் முனைவோர், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுடன் இணைந்த இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியர்வை, கடின உழைப்பு, தொழிலாளர்களின் திறமையால் இந்தியா முன்னேற்றப் பாதையில் செல்லும்.

நமது நாடு பல்வேறு சவால்கள், பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில், நான் இரவு பகலாக பணியாற்றி வருகிறேன். என்னிடம் குறைகள் இருக்கலாம். ஆனால் நமது நாட்டுக்கு எந்தக் குறையும் இருக்காது. என் மீது நான் கொண்டிருக்கும் நம்பிக்கையைவிட, உங்களை, உங்கள் பலத்தை, உங்கள் திறன்களை நான் அதிகமாக நம்பி இருக்கிறேன். ஆரோக்கியமாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள். விழிப்பாக இருங்கள், விஷயங்களை அறிந்தவர்களாக இருங்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x