

வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நன்கொடைகள் பெற்றது, கணக்கில் வராத பணப்பரிவர்த்தனை நடந்ததாக தப்லீக் ஜமாத் நிர்வாகிகள் மீது அளிக்கப்பட்ட புகாரில் சிபிஐ அமைப்பு இன்று வழக்குப்பதிவு செய்து முதல்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது
ஆனால், இந்த விசாரணையில் சிபிஐ அமைப்பு எந்த தனிப்பட்ட நபரின் பெயரையும் குறிப்பிட்டு விசாரணை நடத்தவில்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரோனா வைரஸ் நாடு முழுவதும் பரவுவதைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு சமூக விலகல் கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத்தில் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்றாகக் கூடியிருந்தனர்.
மார்ச் முதல் வாரத்தில் நடத்தப்பட்ட தப்லீக் ஜமாத் மாநாட்டில் நாடு முழுவதிலிருந்தும் 9 ஆயிரம் பேர் பங்கேற்று தங்கள் மாநிலங்களுக்குச் சென்றதாகத் தகவல் வெளியானது. இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா சாத் கந்தால்வி மீது வழக்குப்பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
அவரின் உத்தரவின் பேரில் கடந்த மார்ச் 31-ம் தேதி நிஜாமுதீன் பகுதி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். தப்லீக் ஜமாத் அமைப்பின் தலைவர் மவுலா சாத் கந்தால்வி மீது டெல்லி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளதை அடிப்படையாக வைத்து அமலாக்கப்பிரிவு சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குப்பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் “ தப்லீக் ஜமாத் நிர்வாகிகள் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகவும், நன்கொடைகள் பெற்றதாகவும் புகார்கள் வந்துள்ளன. இந்த நன்கொடைகளை அன்னிய பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் தெரிவிக்கவில்லை எனப் புகார் வந்துள்ளது
அதனடிப்படையில் வழக்கப்பதிவு செய்து முதல்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளோம். எந்த தனிநபரின் பெயரையும் வழக்கப்பதிவில் இதுவரை சேர்க்கவில்லை.
முதல்கட்ட விசாரணையில்தான் உணமையில் பணப்பரிமாற்றம் சட்டவிரோமாக நடந்ததா, கணக்கில்வராத பணம் பெறப்பட்டதா என்பதை உறுதி செய்வதாகும். இதில் அவ்வாறு சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்திக்க முகாந்திரம் இருந்தால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்துவோம்.
டெல்லி போலீஸார், தப்லீக் ஜமாத் நிர்வாகிகள், ஜமாத்துக்கு வந்த கடிதங்கள்ஆகியவற்றைப் பெறும் பணியில்ஈடுபட்டுள்ளோம்” எனத் தெரிவித்தனர்