

வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க கூடுதல் விமானங்கள் இயக்கப்படவுள்ளன.
கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் இந்தியாவுக்குள் வரமுடியாமல் பல்வேறு நாடுகளில் சிக்கி இருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்துவர வந்தேபாரத் மிஷன் தி்ட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. கடல் மார்க்கமாக கப்பற்படைக் கப்பல்கள் சமுத்திர சேது திட்டத்தை செயல்படுத்தி வெளிநாடுகளில் சி்க்கியவர்கள் மீட்டு வரப்படுகின்றனர்.
கடந்த 7-ம் தேதி முதல் 14-ம் ேததிவரை முதல்கட்டமாக செயல்படுத்தப்பட்ட வந்தே பாரத் மிஷன் தி்ட்டம் மூலம் வளைகுடா நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, பிரிட்டன், அமெரிக்கா, பிலி்ப்பைன்ஸ், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து 15 ஆயிரம் இந்தியர்கள் 64 விமானங்கள் மூலம் தாயகம் அழைத்துவரப்பட்டனர்.
2-வது கட்ட வந்தேபாரத் மிஷன் திட்டம் மே 16-ம்தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் 18 நாடுகளில் இருந்து 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர்.
மேலும் 2-வது கட்ட வந்தே பாரத் மிஷன் திட்டம் வரும் ஜூன் 13-ம் தேதிவரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும் வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் 2-ம் கட்டத்தில் ஒரு லட்சம் பேரை வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அழைத்து வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய விமானப் போக்குரவத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது:
2-ம் கட்ட மீட்புப்பணியில் இந்தோனேசியா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, கனடா, ஜப்பான், நைஜிரியா, கஜகஸ்தான், உக்ரைன், கிர்கிஸ்தான், பெலாரஸ், ஜார்ஜியா, தஜிகிஸ்தான், ஆர்மீனியா உள்ளிட்ட 18 நாடுகளில் இருந்து இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். விரைவாக இந்தியர்களை அழைத்த வர கூடுதல் விமானங்கள் இயக்கப்படவுள்ளன.
ஜூன் 4-ம் தேதி டெல்லி - ஆங்லாந்த் இடையேயும், ஜூன் 5-ம் தேதி டெல்லி - சிகாகோ மற்றும் ஸ்டாக்ஹோம் நகரங்களுக்கும் ஜூன் 6-ம் தேதி, மும்பை - நியூயார்க், லண்டன் இடையேயும், டெல்லி - நியூயார்க், பிராங்பகர்ட், சியோல் இடையே விமானங்கள் இயக்கப்படவுள்ளன. இதற்கான முன்பதிவு மே 30-ம் தேதி தொடங்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.