

உத்தரப் பிரதேச பிராய்க்ராஜ் அரசு மருத்துவமனையில் உணவு, தண்ணீர் இல்லை என்று நோயாளிகள் சிலர் எதிர்ப்புத் தெரிவிக்கும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டது.
பிராக்யாராஜ் கோட்வா பானி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் எல்.1 பிரிவு கரோனா சிகிச்சை மருத்துவமனையில் தங்களை விலங்குகளைப் போல் நடத்துவதாக நோயாளிகள் புகார் தெரிவிக்கும் 3 நிமிட வீடியோ வைரலானது. மருத்துவமனையில் உணவு கொடுக்கப்படுவதில்லை, தண்ணீர் வசதியும் இல்லை என்று இவர்கள் புகார் எழுப்பினர்.
“எங்களை விலங்குகளாக்கி விட்டீர்கள். நாங்கள் மிருகங்களா? எங்களுக்கு தண்ணீர் வேண்டாமா?” என்று நோயாளி ஒருவர் வீடியோவில் ஆக்ரோஷமாகக் கேட்டது பதிவாகியுள்ளது.
சில நோயாளிகள் உணவு கிடைக்கவில்லை என்று புகார் எழுப்ப வேறு சில நோயாளிகள் ‘பணம் கொடுத்தால் கிடைக்கிறது’ என்று குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.
இது குறித்து மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி கூறும்போது, ‘மின்சாரப் பிரச்சினை காரணமாக 2 மணி நேரம் தண்ணீர் இல்லை, சரி செய்து விட்டோம், ஓவர் டேங்கில் எப்போதும் தண்ணீர் இருக்கும், ஆனால் நோயாளிகள் புதிதான நீரையே கேட்கின்றனர்” என்றார்.
சில நாட்களுக்கு முன்பாக மாநிலத்தின் கல்வித்துறை கோவிட் 19 தனிமைப்பிரிவு வார்டில் இருப்போர் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என்று தடை செய்யப்பட்டது. ஆனால் கடும் விமர்சனங்களுக்குப் பிறகு இந்த உத்தரவை வாபஸ் பெற்றனர்.