Published : 29 May 2020 12:39 PM
Last Updated : 29 May 2020 12:39 PM

கேரளாவில் மது விற்பனை செயலியைப் போன்று போலிச் செயலிகள் வெளியீடு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- முதல்வர் பினராயி விஜயன் 

மது விற்பனைக்காக கேரள அரசால் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் செயலியைப் போன்று போலியான செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் வெளியிடுவோர் மீது ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கரோனா தொற்று பரவல் நிலவரம் குறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் கேரள முதல்வர் பினராயி விஜயன். அப்போது அவர் கூறியதாவது:

கேரளாவில் நேற்று மிக அதிகபட்ச அளவாக 84 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 5 பேர் மட்டுமே கேரளத்தில் இருப்பவர்கள். 48 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும், 31 பேர் வெளிநாடுகளில் இருந்தும் வந்தவர்கள். நேற்று 3 பேர் நோய் குணமாகி வீடுதிரும்பியிருக்கிறார்கள் புதிதாக நோய்த் தொற்று உறுதியானவர்களில் 18 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 16 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 10 பேர் கண்ணூர் மாவட்டத் தையும், 8 பேர் மலப்புரம் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். தலா 7 பேர் திருச்சூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களையும் , தலா 6 பேர் பத்தனம்திட்டா மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களையும், 3 பேர் கோட்டயம் மாவட்டத்தையும், தலா ஒருவர் ஆலப்புழா இடுக்கி மற்றும் கொல்லம் ஆகிய மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

தற்போது கேரளாவில் கரோனா பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 1,088 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 526 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் 1,14,305 பேர் வீடுகளிலும், 992 பேர் மருத்துவமனையிலும் கண்காணிப்பில் உள்ளனர். நேற்று புதிதாக கரோனா அறிகுறிகளுடன் 210 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கேரளாவில் நோய் பரவல் தீவிரமுள்ள ஹாட் ஸ்பாட் பகுதிகளின் பட்டியலில் புதிதாக 6 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள 3 இடங்களும், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள 2 இடங்களும், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ஒரு இடமும் உள்ளன. இதையடுத்து கேரளாவில் தற்போது ஹாட் ஸ்பாட் பகுதிகளின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் தற்போது பாலக்காடு மாவட்டத்தில் தான் மிக அதிகமாக 105 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கண்ணூர் மாவட்டத்தில் 93 பேரும், காசர்கோடு மாவட்டத்தில் 63 பேரும், மலப்புரம் மாவட்டத்தில் 52 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போதைய சூழ்நிலையில் கேரளாவில் அனைத்துத் தரப்பு மக்களும் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், கேரளாவில் சில தனியார் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக புகார் வந்துள்ளது. அதிகரிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்தியதற்கான ரசீதைக் காண்பித்தால் மட்டுமே அடுத்த வருடத்திற்கான புத்தகங்களை கொடுக்க முடியும் என்று சில பள்ளிகளில் கட்டாயப்படுத்துவதாகவும் புகார் வந்துள்ளது. தற்போதைய சூழலில் இதுபோன்ற செயல்கள் கண்டிக்கதக்கதாகும். எனவே, பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது.

2 மாதங்களுக்குப் பின்னர் கேரளாவில் ஆன்லைன் மூலம் மது விற்பனை தொடங்கியுள்ளது. செல்போன் செயலி மூலம் இந்த விற்பனை தற்போது சுமுகமாக நடைபெற்று வருகிறது. எந்த இடத்திலும் சட்டம் - ஒழுங்கு பாதிப்பு ஏற்படவில்லை. இதுவரை இந்த செயலி மூலம் 2,25,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். தொடக்கத்தில் சில தொழில்நுட்ப பிரச்சினைகள் இருந்தாலும் வரும் நாட்களில் அந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு மது விற்பனை சுமூகமான முறையில் நடைபெறும் என்று கலால் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் சிலர் போலி செயலியை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் அறிவுரையின்படியே கேரளாவில் கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கேரளாவில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மத்திய சுகாதாரத் துறையும் கேரள அரசின் நடவடிக்கைகளை பாராட்டியுள்ளது. ஆனால், கேரளாவின் புகழைக் கெடுக்கும் வகையில் கேரளாவில் நோய்ப் பரவலை மறைப்பதாகவும், மரணங்கள் குறித்த தகவல்களை வெளியிடாமல் இருப்பதாகவும் சிலர் தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர். கரோனா போன்ற நோய்ப் பரவலை எந்த காரணம் கொண்டு மறைக்க முடியாது.

இந்தியாவிலேயே கேரளாவில்தான் நோய்ப் பரவலும், மரணமும் மிகவும் குறைவாகும். தேசிய அளவில் இறப்பு விகிதம் 2.89 ஆகும். ஆனால், கேரளாவில் இறப்பு விகிதம் 0.5 மட்டுமே. கேரளாவில் கரோனா சமூகப் பரவல் ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநிலத் தொழிலாளர் கள் மற்றும் சமூக நெருக்கம் உள்ளவர்களிடம் தினமும் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பரிசோதனைகளில் இதுவரை கேரளாவில் சமூக பரவல் ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், நாளை சமூகப் பரவல் ஏற்படாது என்பதை உறுதியாகக் கூற முடியாது.

கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை ஜூன் 1-ம் தேதி தொடங்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இம்முறை வழக்கத்தைவிட மிக அதிகமாக மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. எனவே, கேரளக் கடல் பகுதியிலும், அரபிக் கடலிலும் இன்று முதல் யாரும் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். தற்போது ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்.”

இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x