

தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது, சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சிவசங்கரனை நிர்பந்தம் செய்து அவரது ஏர்செல் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த இரண்டு நிறுவனங் களுக்கு விற்க வைத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கு சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தபோது, கலாநிதி மாறன், தயாநிதி மாறன் மற்றும் சன் டைரக்ட் பிரைவேட் லிமிடெட் நிர்வாகி ஆகியோர் ஆஜராகி இருந்தனர்.
சிபிஐ சார்பில் ஆஜரான மூத்த அரசு வழக்கறிஞர் கே.கே.கோயல், ‘இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மலேசிய தொழிலதிபர் டி.அனந்த கிருஷ்ணன், அகஸ்டஸ் ரால்ஃப் மார்ஷல் மற்றும் மேக்சிஸ் கம்யூனிகேஷன்ஸ் பெர்ஹாட், ஆஸ்ட்ரோ ஆல் ஆசிய நெட் வொர்க் ஆகிய நிறுவனங்களுக் கும் சம்மன் அளிக்கப்பட்டிருந்தது. இந்த சம்மன்களை அவர்களுக்கு வழங்க மலேசிய அரசு ஒத்துழைக்க மறுக்கிறது. மீண்டும் புதிதாக சம்மன் பிறப்பிக்க வேண்டும்’ என்று வாதிட்டார். சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆனந்த் குரோவரும் இதே கருத்தை வலியுறுத்தினார்.
இதைக் கேட்ட நீதிபதி ஓ.பி.சைனி, ‘இந்த வழக்கை ஏன் இரண்டாக பிரித்து விசாரணை நடத்தக் கூடாது?’ என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ஆனந்த் குரோவர், ‘வழக்கின் இந்த கட்டத்தில் இரண்டாக பிரிப்பது பாரபட்சமாக அமைந்துவிடும். எனவே, இன்னும் கொஞ்சம் காத்திருந்து சம்மனை வழங்க முயற்சிக்கலாம்’ என்று வாதிட் டார். இதையடுத்து, டிசம்பர் 7-ம் தேதிக்குள் நிறைவேற்றும் வகை யில் புதிய சம்மன்களை பிறப் பித்து நீதிபதி உத்தரவிட்டார். சம்மன் அனுப்பும் விவகாரங் களை 4 மாதங்களுக்குள் முடித்துக்கொள்ள சிபிஐக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகியோரது ஜாமீன் மனுக்கள் மற்றும் இந்த வழக்கை விசாரிக்க சிபிஐ நீதி மன்றத்திற்கு அதிகார வரம்பு இல்லை என்ற அவர்களது மனுக்கள் குறித்தும் சிபிஐ நீதிமன்றம் அடுத்த விசாரணை யின்போது முடிவெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.