

கர்நாடக முதல்வர் எடியூரப்பா நேற்று மாலை பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்களின் நலன்கருதி கடந்த சில வாரங்களாக ஊரடங்கு விதிமுறைகளை படிப்படியாக தளர்த்தி வருகிறோம். வியாழக்கிழமை வரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,493 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவை கட்டுப்படுத்துவது, ஊரடங்கு விதிமுறைகளை தளர்த்துவது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக தற்போது அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது. ஜூன் 1 முதல் 90 சதவீத ஊரடங்கு விதிமுறைகளை தளர்த்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே போல கரோனா அதிகமாக பாதித்த மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய 5 மாநிலங்களில் இருந்து கர்நாடகாவுக்குள் நுழைய மே 31-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டது. அதனை மேலும் 15 நாட்கள் நீட்டித்து ஜூன் 15-ம் தேதி வரை கர்நாடகாவுக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. எனவே இந்த 5 மாநிலங்களில் இருந்து விமானம், ரயில், பேருந்து, வாகனங்கள் உள்ளிட்டவை மூலம் கர்நாடகாவுக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது.
7 நாட்கள் முதல் 14 நாட்கள் வரை அரசு கண்காணிப்பு மையத்தில் தனிமைப்படுத்தும் திட்டமும் அமலில் இருக்கிறது. இருப்பினும் கர்நாடகாவின் நலன் கருதி, இங்கு வருவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அத்தியாவசிய தேவைகள், மருத்துவ வசதிகள் தொடர்பான பயணத்தையும் ஒத்திவைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.