

ஒடிசா மாநிலம் கட்டாக் நகர் அருகே உள்ள நரசிங்கப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சன்சாரி ஓஜா (70). இவர் அங்குள்ள ஒரு அம்மன் கோயிலில் பூசாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை அந்தக் கோயிலுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த சரோஜ் குமார் பிரதான் (55) தலை துண்டாகி இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், சரோஜ் குமாரை கொலை செய்ததாக அக்கோயிலில் சாமியாராக உள்ள சன்சாரி ஓஜா, பந்தஹுடா காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்தார். அவர் அளித்த வாக்குமூலத்தில், கரோனா வைரஸை ஒழிக்க வேண்டுமென்றால் ஒரு மனிதனை பலியிட வேண்டும் என அம்மன் தனது கனவில் வந்து கூறியதாகவும், அதனை நிறைவேற்றுவதற்காகவே புதன்கிழமை இரவு கோயிலுக்கு வந்த சரோஜ் குமாரை வெட்டிக் கொன்றதாகவும் கூறினார். இதையடுத்து, போலீஸார் அவரை கைது செய்தனர்.