

போபாலைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தனது குடும்பத்தினர் நான்கு பேர் பயணம் செய்ய ஒரு விமானத்தை வாடகைக்கு எடுத்துள்ளார்.
போபாலைச் சேர்ந்த ஜக்தீஷ் அரோரா என்ற தொழிலதிபர் ஸோம் டிஸ்டில்லெரீஸ் என்கிற மதுபானத் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இவரது மகள், இரண்டு குழந்தைகள், வீட்டுப் பணியாளர் ஆகியோர் புதுடெல்லியிலிருந்து போபாலுக்கு வந்தனர். கடந்த இரண்டு மாதங்களாக கரோனா நெருக்கடியால், ஊரடங்கு அமலில் இருப்பதால் இவர்கள் போபாலிலேயே இருந்தனர்.
தற்போது விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுவிட்டதால், இவர்கள் பத்திரமாக வீடு திரும்ப, விமான நிலையத்தில் இருக்கும் கூட்டத்தை, பொதுவான விமானப் பயணத்தில் இருக்கும் சக பயணிகள் கூட்டத்தைத் தவிர்க்க வேண்டி ஜக்தீஷ், ஏ320 ஏர்பஸ் என்கிற 180 பேர் அமரக்கூடிய விமானத்தை வாடகைக்கு எடுத்துள்ளார்.
இதுகுறித்து தகவல் தெரிவித்த ஒரு விமான நிலைய அதிகாரி, "ஏ320, 180 இருக்கைகள் கொண்ட விமானம். மே 25 அன்று, நான்கு பேரை அழைத்துச் செல்ல போபாலுக்கு வந்தது. கரோனா பீதியால் இதனை ஏற்பாடு செய்திருக்கலாம். இது யாராலோ வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் எந்த மருத்துவ அவசர நிலைக்காகவும் இல்லை" என்று கூறினார்.
போபால் விமான நிலையத்தின் இயக்குநரைத் தொடர்பு கொண்டும் இது பற்றி விவரம் அறிய முடியாமல் போனது.
இந்த விமானத்துக்காக எப்படியும் ஜக்தீஷ் 20 லட்சம் ரூபாய் வரை செலவழித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆறு பேர், எட்டுப் பேர் அமரக்கூடிய சார்டட் விமானங்கள் இருந்தும் கூட ஜக்தீஷ் இந்த விமானத்தையே தேர்ந்தெடுத்ததாகத் தெரிகிறது.
மேலும் இதுபற்றி கேட்க ஜக்தீஷ் அரோராவை ஒரு தனியார் செய்தி ஊடக நிறுவனம் தொடர்பு கொள்ள முயன்றபோது ஆரம்பத்தில் அவர் இதை மறுத்ததாகவும், கடைசியில் ஏன் தனிப்பட்ட விவகாரங்களில் தலையிடுகிறீர்கள் என்று கேட்டதாகவும் தெரிகிறது.