உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டம் ஜூனில் கூடுகிறது: லாக்டவுன் குறித்து உள்துறைச் செயலாளரிடம் விளக்கம்

மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் குமார் பல்லா : கோப்புப்படம்
மத்திய உள்துறைச் செயலாளர் அஜய் குமார் பல்லா : கோப்புப்படம்
Updated on
1 min read

உள்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழுக் கூட்டம் வரும் ஜூன் 3-ம் தேதி மாதம் கூட உள்ளது. அந்தக் கூட்டத்தில் கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுன் குறித்து உள்துறைச் செயலாளர் அஜய் பல்லாவை நேரில் ஆஜராகக் கூறி சுருக்கமாக விளக்கம் அளிக்கக் கோரப்பட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கடந்த மார்ச் 25-ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கை அறிவித்தது. ஆனால், கரோனா பாதிப்புகள் குறையாததையடுத்து அடுத்தடுத்து ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு தற்போது 4-வது கட்ட ஊரடங்கு செயல்பாட்டில் இருக்கிறது.

இந்நிலையில் உள்துறைக்கான நாடாளுமன்றக் குழுக் கூட்டம் வரும் ஜூன் 3-ம் தேதி நடக்கிறது. காங்கிரஸ் எம்.பி. ஆனந்த் சர்மா தலைமையில் கூட உள்ள இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அனைத்து உறுப்பினர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் அஜய் பல்லா நேரில் ஆஜராகி ஊரடங்கு குறித்து சுருக்கமாக விளக்க வேண்டும், லாக்டவுனில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மாநிலங்களை ஒருங்கிணைத்த விவகாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவர் விளக்க வேண்டும் எனவும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்பும்போது வழியில் உயிரிழந்தது, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு செய்து கொடுக்கப்பட்ட வசதிகள், உணவு, உறைவிடம், போக்குவரத்து வசதிகள் போன்றவை குறித்தும் விவாதிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரோனா வைரஸால் லாக்டவுன் கொண்டுவரப்பட்ட பின் உள்துறைக்கான நாடாளுமன்றக் குழு கூடுவது இதுதான் முதல் முறையாகும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in