

உத்தரப் பிரதேச மாநிலம் ஷகாரன்பூரில் 19 வயது புலம்பெயர் தொழிலாளி பட்டினியால் உயிரிழந்தது தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அளித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் வேலையிழந்து, கொடும் வறுமைக்கு ஆளான புலம்பெயர் தொழிலாளர்கள் கால்நடையாகவும், சைக்கிளிலும் சொந்த ஊருக்குச் சென்று வருகின்றனர். அவர்களைச் சொந்த மாநிலங்களில் கொண்டு சேர்ப்பதற்காக ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்திலும் இயக்கி வருகிறது.
இருப்பினும் புலம்பெயர் தொழிலாளர்கள் கால்நடையாகவும், சைக்கிள்கிளிலும் சொந்த ஊர்களுக்குச் செல்வது இருந்து வருகிறது. இதில் உத்தரப் பிரதேச மாநிலம் ஷகாரன்பூரைச் சேர்ந்த விபின் குமார் எனும் 19 வயது புலம்பெயர் தொழிலாளி ஒருவர் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஒரு மெக்கானிக் ஷாப்பில் வேலை செய்து வந்தார்.
லாக்டவுனில் கடை மூடப்பட்டதால் வேலயிழந்த விபின் குமார் கையில் பணமில்லாமல் லூதியானாவிலிருந்து 350 கி.மீ. தொலைவு நடந்து ஷகரான்பூர் அருகே இருக்கும் சொந்த ஊரான ஹர்தோய் சுர்சாவுக்குச் சென்றார்.
ஏறக்குறைய 6 நாட்கள் லூதியானாவிலிருந்து நடந்து சென்ற விபின் குமார் ஷகரான்பூர் அருகே வந்தபோது பட்டினியில் சுருண்டு சாலையில் விழுந்தார். சாலையில் சென்றவர்கள் விபின் குமாரை மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி விபின் குமார் உயிரிழந்தார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் பட்டினியில் விபின் குமார் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் கடந்த 12-ம் தேதி நடந்தது.
புலம்பெயர் தொழிலாளர் விபின் குமார் பட்டினியால் இறந்தது குறித்து நாளேடுகள், ஊடகங்கள் வாயிலாக அறிந்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து உத்தரப் பிரதேச அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் அனுப்பிய நோட்டீஸில், “கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவுன் தொடங்கியதிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் அனுபவிக்கும் வேதனை தொடர்ந்து வருகிறது.
சாலையில் குழந்தை பெறுவது, சாலையில் பட்டினியால் இறப்பது, நடந்து செல்வது, நோயுற்று வீழ்வது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன.
ஆனால், இதில் உத்தரப் பிதேசத்தைச் சேர்ந்த விபின் குமார் எனும் புலம்பெயர் தொழிலாளி பட்டினியால் இறந்தது மிகவும் தீவிரமான மனித உரிமை மீறலாகும். இந்த விவகாரத்தில் உத்தரப் பிரதேச அரசின் தலைமைச்செயலாளர் அடுத்த 4 வாரங்களில் விளக்கம் அளிக்க வேண்டும்.
மாநிலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை, அவர்களுக்கு அளிக்கப்படும் வசதிகள், உணவு, குடிநீர், உறைவிடம், சொந்த ஊர் செல்ல செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்.
இந்த வசதிகளை வழங்கக் கூறி மாநில அரசு உத்தரவிட்டும், அது முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை எனத் தெரிகிறது. ஆதலால் அதுகுறித்த அறிக்கையை வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.