

எங்களிடம் தெரிவிக்காமலேயே 36 ரயில்கள் மேற்குவங்கத்திற்கு வருகின்றன என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது. இதனால் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டதால், பல்வேறு மாநிலங்களில் புலம்பெயர்ந்து வேலைபார்த்த தொழிலாளர்கள் வேலையிழந்தனர்.
ஆனால், லாக்டவுன் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டதால், வேலையிழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போக்குவரத்து வசதியும் இல்லாமல், கையில் பணமும் இல்லாமல் சாலையில் கூட்டம் கூட்டமாக நடக்கத் தொடங்கினர். சாலையில் கிடைக்கும் உணவுகளைச் சாப்பிட்டும், பட்டினியோடும் நடந்தனர். இதில் பலர் செல்லும் வழியில் இறந்ததாகவும், விபத்துகளில் சிக்கி உயிரிழந்த சம்பவங்களும் நடந்தன.
இதையடுத்து, கடந்த 1-ம் தேதி முதல் புலம்பெயர் தொழிலாளர்கள் செல்வதற்காக ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை மத்திய அரசு இயக்கி வருகிறது. இதுவரை ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மூலம் 40 லட்சம் தொழிலாளர்களுக்கு மேல் சொந்த மாநிலம் சென்றுள்ளதாக ரயில்வே தகவல் தெரிவிக்கிறது.
இந்தநிலையில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியதாவது:
எங்களிடம் தெரிவிக்காமலேயே மும்பையில் இருந்து 36 ரயில்கள் மேற்குவங்கத்திற்கு வருகின்றன. மகாராஷ்டிர அரசிடம் கேட்டால் தங்களுக்கும் இந்த விவரம் காலதாமதமாக தான் தெரியும் என கூறுகின்றனர். ரயில்வே நிர்வாகம் தானாகவே திட்டமிட்டு செயல்படுத்துகிறது’’ எனக் கூறினார்.