Published : 27 May 2020 03:49 PM
Last Updated : 27 May 2020 03:49 PM

ஆயுஷ் சஞ்சீவனி விநாடி-வினா போட்டி: ரொக்கப் பரிசு ரூ.1 லட்சம்- உடனடியாகச் சான்றிதழ்

கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதில் இருந்து பாரம்பரிய மருத்துவமுறைகளின் செயல்திறம் குறித்த விவாதங்களும் அக்கறைகளும் தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. கரோனா வைரஸை அழிப்பதற்கும் தொற்றாமல் தடுப்பதற்கும் மருந்து இல்லாத நிலையில் தடுமாறிக்கொண்டு இருக்கிறோம்

நமக்கு இருக்கும் ஒரே வழி வைரஸ் நம் உடலுக்குள் தொற்றாமல் இருக்கக் கூடிய வழிமுறைகளைக் கடைபிடிப்பதுதான். முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், தும்மல்,இருமலின்போது கைக்குட்டை பயன்படுத்தல், பொது இடங்களில் எச்சில் துப்பாமல் இருத்தல் போன்றவற்றை நாம் தொடர்ந்து கடைபிடித்தாக வேண்டும்.

அதுமட்டும் அல்லாமல் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, யோகா-இயற்கை மருத்துவம் போன்ற மருத்துவ முறைகள் பரிந்துரைக்கும் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் வழிமுறைகளையும் கடைபிடித்தாக வேண்டும்.

இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் இந்திய மருத்துவ முறைகளின் ஆலோசனைத் தொகுப்பை கோவிட்-19 கட்டுப்பாட்டு நடவடிக்கையாக வெளியிட்டது. நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்துக் கொள்ள உணவு முறைகள், மருந்துகள், உடற்பயிற்சிகள், யோகாசனம், மூச்சுப் பயிற்சிகள் ஆகியவை இந்தத் தொகுப்பில் தரப்பட்டு இருந்தன.

பலரும் இவற்றில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தத் தொடங்கினர். இந்த வழிமுறைகள் எந்த அளவு கரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தடுத்துள்ளது என்று அறிந்துகொள்ள ஆயுஷ் அமைச்சகம் “ஆயுஷ் சஞ்சீவனி” என்ற செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது.

அதையொட்டி விநாடி வினா போட்டியையும் அறிவித்துள்ளது. பொதுமக்கள் இந்த விநாடி-வினாவில் பங்கேற்பதன் மூலம் பொதுவாக ஆயுஷ் மருத்துவ முறைகள் பற்றியும் குறிப்பாக ஆயுஷ் சஞ்சீவனி செயலி குறித்தும் தெரிந்து கொள்ள முடியும்.

quiz.mygov.in என்ற வலைத்தளத்தில் இந்தப் போட்டி நடைபெறுகின்றது. 22.5.2020 அன்று தொடங்கிய இந்தப் போட்டி 21.6.2020 அன்று நிறைவடைகின்றது. இந்திய குடிமக்கள் யார் வேண்டுமென்றாலும், எந்த வயதினரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம். இந்த வலைத்தளத்தில் நுழைந்தவுடன் ஏதாவது ஒரு முறையில் லாக்இன் செய்ய வேண்டும்.

ஏற்கெனவே @gov.in அல்லது @nic.in கணக்கு வைத்திருப்பவர்கள் நேரிடையாக லாக்இன் செய்யலாம். மற்றவர்கள் இ-மெயில் / மொபைல் மூலம் ஓடிபி வரப்பெற்று லாக்இன் செய்யலாம். இல்லையென்றால் தங்களது சமூக ஊடகக் கணக்கின் மூலம் லாக்இன் ஆகலாம். பிறகு பெயர், இ-மெயில் முகவரி, பிறந்த தேதி, பாலினம் ஆகிய தகவல்களைத் தந்து பதிவு செய்து கொண்டு நேரிடையாகப் போட்டியில் பங்கேற்கலாம்.

போட்டியில் 10 கேள்விகள் கேட்கப்படும். ஏற்கெனவே இருப்பில் உள்ள கேள்வித் தொகுப்பில் இருந்து ஏதாவது 10 கேள்விகள் தற்செயலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு கேட்கப்படும். விநாடி-வினா போட்டிக்கான கால அவகாசம் 120 விநாடிகள் ஆகும். ஆயுஷ் பரிந்துரைத்த ஆலோசனைத் தொகுப்பு மற்றும் கோவிட்-19 தொடர்பாக கேள்விகள் இருக்கும்.

போட்டியில் 10 கேள்விகளுக்கும் பதில் கூறிய பிறகு தகுதி பெறுவதற்கான மதிப்பெண்களைப் பெற்றிருந்தால் பங்கேற்றவரின் பெயரை அச்சிட்ட பங்கேற்புச் சான்றிதழ் உடனடியாக பதிவிறக்கம் செய்யக் கிடைக்கும். ஒருவர் ஒருமுறைமட்டுமே இந்தப் போட்டியில் பங்கேற்க முடியும்.

21.6.2020 க்குப் பிறகு மொத்தப் பங்கேற்பாளர்களில் இருந்து பரிசுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ரொக்கப் பரிசுகளை மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சிக் குழுமம் வழங்கும். ஒரு முதல் பரிசு ரூ.25,000/-, மூன்று இரண்டாம் பரிசுகள் தலா ரூ.10,000/- மற்றும் ஐந்து மூன்றாம் பரிசுகள் தலா ரூ.5,000/- வழங்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x