

வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களில் உணவு, உரியநேர சிகிச்சை இன்றி 3 குழந்தைகள் பலியாகி உள்ளன. வீடு திரும்ப சாலைகளில் நடந்த போது நிகழந்த பரிதாபநிலை அவர்கள் சிறப்பு ரயில்களில் பயணம் செய்த போதும் தொடர்வதாகக் கருதப்படுகிறது.
வெளிமாநிலங்களில் சிக்கியத் தொழிலாளர்கள் போதுமானப் போக்குவரத்து கிடைக்காமல் நடந்தே தம் ஊர் திரும்பும் நிலை இருந்தது. பல நூறு கி.மீ தொலைவிற்கு குழந்தை மற்றும் தம் உடமைகளுடன் கடந்த வேண்டியக் கட்டாயம் ஏற்பட்டது.
இதன் காரணமாக விபத்துக்களாலும், உடல்நலம் குன்றி வழியிலும் தொழிலாளர்கள் பலியாவது நிகழ்ந்தது. இந்த அவலநிலை செய்திகளில் வெளியானதை கண்டு மத்திய அரசு ’ஸ்ரமிக் ஸ்பெஷல்’ எனும் பெயரில் தொழிலாளர்கள் சிறப்பு ரயில்களை துவக்கி உள்ளது.
இதன் பிறகும் தொழிலாளர்களின் பலி தடுத்து நிறுத்த முடியாத சூழல் உருவாகி உள்ளது. இதற்கு அதில் முறையாகத் அமலாக்கப்படாத உணவு விநியோகம் மற்றும் மருத்துவ சேவை போன்றவை காரணமாகி விட்டது.
டெல்லி ரயில் நிலையத்தில் இருந்து அன்றாடம் பல சிறப்பு ரயில்கள் தொழிலாளர்களுக்காக விடப்படுகின்றன. கரோனா வைரஸ் பரவலால் அதில், வழக்கமாக கிடைக்கும் உணவை பயணத்தின்போது பெற வழியில்லை.
இதனால், தொழிலாளர்கள் ரயிலில் ஏறும் போதும், வழியில் அவை நிறுத்தப்படும் போதும் உணவளிக்க திட்டமிடப்பட்டு வந்தது. இவை, அரசு அல்லது சமூகவேவை அமைப்புகளால் அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
எனினும், இந்த உணவுப் பிரச்சனையில் நிலவும் பெரும் குறைபாடுகளால் கடந்த சில நாட்களாக உயிர் பலிகள் ஏற்படத் துவங்கி விட்டன. இதில் ஒன்றாக பிஹார் தொழிலாளர்
பிண்ட்டு ஆலமின் 4 வயதுப் பச்சிளங்குழந்தையான இர்ஷத்தின் உயிர் நேற்று ஓடும் ரயிலில் பிரிந்துள்ளது.
டெல்லியிலிருந்து பிஹாரின் தலைநகரான பாட்னாவிற்கு வழக்கமாக செல்லும் ரயிலின் பயணநேரம் 15 மணி நேரம். ஆனால், இந்த ரயில் சென்றடைய 36 மணி நேரம் பிடித்ததுடன் வழியிலும் உணவுப் பிரச்சனை இருந்துள்ளது.
இது குறித்து பிண்ட்டு ஆலம் கூறும்போது, ‘பசியால் எனது மகன் துடித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு உணவளிக்க வழியில் வந்த ரயில் நிலையங்களிலும் கடைகள் இல்லை. இதை வாங்க என்னிடம் பணம் இருந்து பலனளிக்காமல் எனது மகனை இழந்து விட்டேன்’ எனத் தெரிவித்தார்.
இதேபோல், மற்றொரு சிறப்பு ரயிலில் குடும்பத்துடன் பயணம் செய்த சர்வேஷ்சிங்(35) என்பவரின் ஒரு மாத பிஞ்சுக்குழந்தையும் கோரக்பூர் செல்லும் வழியில் நேற்று ரயிலில் பலியானது. கடுமையானக் காய்ச்சல் ஏற்பட்டு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காதது இதன் காரணமானது.
இது குறித்து சர்வேஷ்சிங் கூறும்போது, ‘ஜான்சியை கடந்த போது ரயில்துறையின் அவசர உதவி தொலைபேசியில் புகார் அளித்தேன். ஆனால், சிகிச்சைக்காக அடுத்த 2 மணி நேரத்தில் வந்த ஒரய் ரயில் நிலையத்தில் மருத்துவர் பார்ப்பதற்குள் குழந்தையின் உயிர் பிரிந்தது.’ எனத் தெரிவித்தார்.
இவைகளுக்கு முன்னதாக கடந்த சனிக்கிழமையிலும் ஒரு 46 வயது தொழிலாளரின் உயிரும் ஜோன்பூரில் ஓடும் ரயிலில் பிரிந்துள்ளது. கடந்த மே 23 இல் உத்திரப்பிரதேசம் அலிகர் மற்றும் டூண்ட்லா ரயில் நிலையங்களுக்கு இடையே 10 மாத குழந்தை ஓடும் ரயிலில் மூச்சுத்திணறலால் பலியானது.
இதுபோல், பல்வேறு காரணங்களால் ஓடும் ரயிலில் பலியாகும் உயிர்களுக்கு உணவு கிடைக்காதது ஒரு அடிப்படைக் காரணமாகக் கருதப்படுகிறது. இதற்கு மத்திய, மாநில அரசு அதிகாரிகளுக்கு இடையிலான முறையான ஒருங்கிணப்பு இல்லாதது பெரும் குறையாகப் பார்க்கப்படுகிறது.