

கர்நாடகாவில் மே 31-ம் தேதிக்கு பிறகு வழிபாட்டு தலங்கள் அனைத்தும் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. கரானோவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மே 3-ம் தேதி வரையும் பின்னர் மே 17-ம் தேதி வரையிலும் ஊடரங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 4ம் கட்டமாக மே 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கர்நாடகாவில் கரோனா தொற்று குறைவாக இருப்பதால், 4-ம் கட்ட ஊரடங்கில் பெரும்பாலான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதன்படி மாவட்ட மற்றும் புறநகர் ரயில்களை இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
அனைத்து வர்த்தக நிறுவனங்களும் செயல்படத் தொடங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து மே 31-ம் தேதிக்கு பிறகு வழிபாட்டு தலங்கள் அனைத்தும் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் உள்ள கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் என அனைத்தும் திறக்கப்படும் எனத் தெரிகிறது. அதேசமயம் போதிய கட்டுப்பாடுகளுடனும், சமூகவிலகலுடனுமே வழிபாட்டுக்கு அனுமதி வழங்கப்படும் எனத் அறிவிக்கப்பட்டுள்ளது.