

கரோனா வைரஸ் பலிகளும் பாதிப்புகளும், லாக்டவுன் பாதிப்புகளும் சிக்கல்களும் தொடரும் இந்த நேரத்தில் சிலபல விசித்திர நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.
மீரட்டில் ஒரு தாய் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். கரோனா காலத்தின் இணைபிரியாத தனிமைப்படுத்தல் மற்றும் கிருமிநாசினி துப்புரவு பொருள் ஆகியவற்றின் நினைவாக தங்கள் இரட்டைக் குழந்தைகளுக்கு அவர்கள் விநோத பெயர்களைச் சூட்டியுள்ளனர்.
ஆம்! கரோனா காலத்தின் இணைபிரியாத ‘குவாரண்டைன்’ மற்றும் ‘சானிட்டைசர்’ என்ற இரண்டன் பெயரை தங்கள் இரட்டைக் குழந்தைகளுக்கு முறையே பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளனர் பெற்றோர்.
இது தொடர்பாகக் கூறும்போது, “இந்த இரண்டு பெயர்கள், அதாவது குவாரண்டைன் மற்றும் சானிட்டைசர் ஆகியவை கரோனா வைரஸுக்கு எதிராக மனிதர்களுக்கு பாதுகாப்பு தரும் இரண்டு முக்கிய விஷயங்களாகும். அதனால்தான் இந்த ஆண்குழந்தைகளுக்கு இந்தப் பெயரையே சூட்டியுள்ளோம் “. டெலிவரிக்கு முன்னதாக எனக்கும் கரோனா டெஸ்ட் செய்யப்பட்டது” என்று தாயார் வேணு ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்தாரிடம் தெரிவித்தார்.
தந்தை தர்மேந்திரா கூறும்போது, “குவாரண்டைன், சானிட்டைசர் இரண்டும் நமக்கு பாதுகாப்பு அளிப்பவை. இது வாழ்நாள் முழுதுக்குமான பாதுகாப்பு. எனவே இதுதான் சிறந்த பெயர்களாக இருக்க முடியும் என்று எங்கள் குழந்தைகளுக்கு இவற்றைத் தேர்வு செய்தோம்.” என்றார்.
இந்தக் குடும்பம் மீரட் நகரின் மோதிபுரம் பகுதியில் வசித்து வருபவர்கள். இவர்களுக்கு பதின்ம வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர்.