Published : 27 May 2020 08:12 AM
Last Updated : 27 May 2020 08:12 AM

திருப்பதி சொத்துகளை விற்க தடை விதிக்க வேண்டும்: ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கு

திருப்பதி ஏழுமலையானுக்கு பல பக்தர்கள் காணிக்கையாக தங்களுடைய அசையா சொத்துகளை வழங்கி வருகின்றனர். இந்த சொத்துக்களை தேவஸ்தானம் பராமரித்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில்உள்ள 23 இடங்கள், ஆந்திராவில் உள்ள 26 இடங்கள், ரிஷிகேஷில் உள்ள ஒரு நிலத்தையும் விற்க சமீபத்தில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதனால் திருப்பதி தேவஸ்தானத்தின் அசையா சொத்துக்களை விற்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு ஆந்திர அரசு நேற்று முன்தினம் இரவு அரசாணை பிறப்பித்தது.

திருப்பதி தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பா ரெட்டி கூறும்போது,“ஏழுமலையானின் சொத்துகளைபாதுகாக்கவே பொறுப்பேற்றுள்ளோம். பராமரிப்பு செய்ய இயலாத,வெகுதூரத்தில் உள்ள சிறிய நிலங்கள், வீட்டு மனைகளை விற்கவே தீர்மானிக்கப்பட்டது. இதுகூட கடந்த அறங்காவலர் குழுவின் தீர்மானமே. இதனை நாங்கள் மறு பரிசீலனை செய்தோம். ஆனால் பகிரங்க ஏலம் விடுவதாக அறிவிக்க வில்லை" என்றார்.

இந்நிலையில், ஏற்கெனவே அறிவித்தபடி தேவஸ்தானத்தின் செயலை கண்டித்து ஆந்திர மாநிலத்தில் பாஜகவினர் அவரவர் வீடுகளில் காலை முதல் மாலை வரை உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர்.

இதனிடையே, திருமலை திருப்பதி தேவஸ்தான அசையாசொத்துகளை விற்கும் பிரச்சினை குறித்து ஆந்திர உயர் நீதிமன்றத்தில் நேற்று அனந்தப்பூரை சேர்ந்த அமர்நாத் எனும் வழக்கறிஞர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இவரின் மனுவில், "திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அசையா சொத்துகளை விற்க அறங்காவலர் குழுவுக்கும், மாநில அரசுக்கும் தடை விதிக்க வேண்டும்" என கூறப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x