

ஆர்எஸ்எஸ் இணை பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபல் வெளியிட்டுள்ள வீடியோ தகவலில் கூறியிருப்பதாவது:
இந்த ஆண்டின் தொடக்கத்தில் கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. இதையடுத்து, கடந்த மார்ச் முதல் வாரத்திலேயே வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் காய்ச்சல் பரிசோதனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது. இதன் தொடர்ச்சியாக மார்ச் 25 முதல் நாடு தழுவிய ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தார். இதற்கு நாட்டு மக்களும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
மேலும் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில், அனைத்து மாநில முதல்வர்களுடனும் கரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார். அத்துடன் நாட்டு மக்களுக்கு அவர் அவ்வப்போது உரையாற்றி வருகிறார். மத்திய அரசும் கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் பிற நாடுகளைவிட இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளைவிட இந்தியாவில் உயிரிழப்பு குறைவாக உள்ளது. எனினும், ஒவ்வொரு உயிரும் விலைமதிப்பற்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.