

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டு வந்த லாக்டவுனால் வேலையிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல முடியாமல் பல்வேறு நகரங்களில் சிக்கி அனுபவித்து வரும் துன்பங்களைப் பார்த்த உச்ச நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.
புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் தேவையான உணவு, தங்குமிடங்களை இலவசமாக வழங்க உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், மத்திய அரசும், மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் பதில் மனுத்தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது. இதனால் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டதால், பல்வேறு மாநிலங்களில் புலம்பெயர்ந்து வேலைபார்த்த தொழிலாளர்கள் வேலையிழந்தனர்.
ஆனால், லாக்டவுன் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டதால், வேலையிழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் போக்குவரத்து வசதியும் இல்லாமல், கையில் பணமும் இல்லாமல் சாலையில் கூட்டம் கூட்டமாக நடக்கத் தொடங்கினர். சாலையில் கிடைக்கும் உணவுகளைச் சாப்பிட்டும், பட்டினியோடும் நடந்தனர். இதில் பலர் செல்லும் வழியில் இறந்ததாகவும், விபத்துகளில் சிக்கி உயிரிழந்த சம்பவங்களும் நடந்தன.
இதையடுத்து, புலம்பெயர் தொழிலாளர்கள் சாலையில் நடந்து செல்லத் தடை விதித்த மத்திய அரசு அவர்களுக்குத் தங்குமிடம், உணவுகளை வழங்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது. ஆனால், முறையான தங்குமிடம், உணவு கிடைக்காமல் புலம்பெயர் தொழிலாளர்கள் பகல் இரவு பாராமல் சொந்த மாநிலம் நோக்கி நடந்தனர். இதில் லாரிகளில் விபத்துகளில் சிக்கி நாள்தோறும் புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி வந்தவாறு இருந்தன.
மகாராஷ்டிராவில் அவுரங்காபாத்தில் ரயில் தண்டவாளத்தில் படுத்துத் தூங்கிய தொழிலாளர்கள் மீது ரயில் மோதியதில் 16 பேர் பலியானார்கள். உத்தரப் பிரதேசத்தில் லாரிகள் மோதிக்கொண்ட விபத்தில் 26 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதுபோல் நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் நிறைய சம்பவங்கள் நடந்தன.
இதையடுத்து, கடந்த 1-ம் தேதி முதல் புலம்பெயர் தொழிலாளர்கள் செல்வதற்காக ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை மத்திய அரசு இயக்கி வருகிறது. இதுவரை ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மூலம் 40 லட்சம் தொழிலாளர்களுக்கு மேல் சொந்த மாநிலம் சென்றுள்ளதாக ரயில்வே தகவல் தெரிவிக்கிறது.
இந்தச் சூழலில் புலம்பெயர் தொழிலாளர்கள் இன்னும் சொந்த ஊர் செல்ல முடியாமல் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சிக்கி அவதியுறும் காட்சிகளையும், துன்பங்களையும் நடந்து செல்லும் நிகழ்வுகளையும், சைக்கிளில் செல்லும் சம்பவங்களையும் நாளேடுகள், தொலைக்காட்சி வாயிலாகப் பார்த்தும், படித்தும் உணர்ந்த உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று வழக்காகப் பதிவு செய்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன், சஞ்சய் கிஷன் கவுல், எம்ஆர் ஷா ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை இன்று விசாரித்தது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சிக்கி சொந்த மாநிலம் செல்ல முடியாமல் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்குத் தேவையான உணவு, தங்குமிடங்களை இலவசமாக மத்திய அரசும், மாநில அரசுளும் வழங்கிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மத்திய அரசும், மாநில அரசுகளும், புலம்பெயர் தொழிலாளர்கள் நலனுக்காக, பிரச்சினைகளைத் தீர்க்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்பது குறித்து தங்கள் பதிலை வரும் 28-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நீதிமன்றத்துக்கு உதவுவார் என நீதிபதிகள் தெரிவித்தனர்.