Published : 26 May 2020 06:06 PM
Last Updated : 26 May 2020 06:06 PM

புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகம் திரும்பி வரும் 5 மாநிலங்கள்; கரோனா பரவலை தடுப்பது பற்றி மத்திய அரசு ஆலோசனை

புலம்பெயர் தொழிலாளர்கள் அதிக அளவில் திரும்பி வருகின்ற 5 மாநில அதிகாரிகளுடன் மத்திய சுகாதாரத்துறைச செயலாளர் ஆய்வு நடத்தினார்.

மத்திய சுகாதாரச் செயலாளர் பிரீதி சுதன், சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் சிறப்புப்பணி அதிகாரி ராஜேஷ் பூஷன் மற்றும் சுகாதார அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் ஆகியோர் உத்திரப்பிரதேசம். பீகார், ஜார்க்கண்ட், சட்டிஸ்கர் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், சுகாதாரச் செயலாளர்கள் மற்றும் தேசிய சுகாதாரத்திட்ட இயக்குநர்களுடன் உயர்நிலை ஆய்வுக்கூட்டத்தை இன்று நடத்தினர்.

கடந்த மூன்று வாரங்களாக ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு இருப்பதாலும் மாநிலங்களுக்கு இடையிலான புலம்பெயர்வு அனுமதிக்கப்பட்டு உள்ளதாலும் இந்த மாநிலங்களில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது.

நோயாளி இறப்பு விகிதம், இருமடங்காகும் காலம், பத்து லட்சம் மக்களில் எத்தனை பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது மற்றும் தொற்று உறுதி செய்யப்படும் சதவிகிதம் ஆகியவை தொடர்பாக தனித்தனி நேர்வுகளின் விசை வீச்சு வளைவு குறித்து மாநிலங்களுக்கு விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டன.

செயல்உத்தி மீது கவனம் செலுத்த வேண்டிய தேவைக்கான காரணங்களும் சுட்டிக்காட்டப்பட்டன. சுற்றளவுக் கட்டுப்பாடு, சிறப்புக் கண்காணிப்புக் குழுக்கள் மூலம் வீடு வீடாகச் சென்று கணக்கெடுத்தல், பரிசோதனை, தொற்றுள்ளவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறிதல் மற்றும் திறன்மிக்க மருத்துவமனை நிர்வாகம் ஆகியன குறித்து எடுத்துச் சொல்லப்பட்டன. ஒவ்வொரு தனிமைக் கட்டுப்பாட்டு மண்டலமும் நோய்த்தொற்றுப் போக்குகளைக் கண்டறிவதற்காகப் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டுமென்றும் நுண்அலகுத் திட்டங்களை முறையாக உருவாக்கி நடைமுறைப்படுத்துவதன் வழியாக அவற்றின் செயல்முறைகளில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்தப்பட்டது. மேலும் இடைப்பட்ட மண்டலத்துக்குள் (Buffer Zone) எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.

தனிமைப்படுத்தும் மையங்கள், தீவிர சிகிச்சைப் பிரிவு / வென்ட்டிலேட்டர், ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தற்போது இருக்கின்ற மருத்துவச் சுகாதார உள்கட்டமைப்பு வசதிகள் மீது மாநிலங்கள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்று

வற்புறுத்தப்பட்டது. அடுத்த இரண்டு மாதங்களுக்கான தேவை குறித்த மதிப்பீட்டின்படி உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியசேது செயலி மூலம் உருவாகும் தகவல் தரவைப் பயன்படுத்துவது குறித்தும் பங்கேற்ற மாநிலங்களுக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

கோவிட் அல்லாத இதர அத்தியாவசிய சுகாதாரச் சேவைகளான அதாவது காசநோய், தொழுநோய், நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், தொற்றா நோய்களான உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, விபத்தினால் ஏற்படுகின்ற காயங்கள் மற்றும் அதிர்ச்சிக்கு சிகிச்சை அளித்தல் போன்ற நடவடிக்கைகள் தொடரப்பட வேண்டும். மாநிலங்கள் இதற்கான உடனடி நடவடிக்கைகைளத் தொடங்கவேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் நினைவூட்டப்பட்டது.

தனிமைக் கட்டுப்பாட்டு மண்டலங்களில் நடமாடும் மருத்துவப்பிரிவுகள் (MMUs) தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று ஆலோசனை தரப்பட்டுள்ளது; தற்போது அந்தந்தப் பகுதிகளில் இருக்கும் கட்டிடங்களிலேயே துணை சுகாதார மையங்கள் தற்காலிகமாக அமைக்கப்பட வேண்டும், தேசிய குழந்தைகள் நலத்திட்டக் குழுவினர் போன்ற மருத்துவப் பணியாளர்கள் கூடுதலாக முன்னணிக் களத்தில் பயன்படுத்திக் கொள்ளப்படவேண்டும் மேலும் ஆயுஷ்மான் பாரத்தோடும் இணைப்பு இருக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள் நிர்மாணிக்கப்பட வேண்டும். அப்போது விரைவாக மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும். இந்த மையங்களில் தொலை-மருத்துவ வசதியையும் தொடங்கி நடத்தலாம். ஏற்கனவே இருக்கின்ற கட்டிடங்களில் தற்காலிகத் துணை சுகாதார மையங்கள் கூடுதல் சுகாதாரப் பணியாளர்களுடன் செயல்படத் தொடங்கலாம்.

சொந்த ஊருக்குத் திரும்பி வருகின்ற புலம்பெயர் தொழிலாளர்களால் அதிகரிக்கும் நோயைச் சமாளிப்பதற்காக ஆஷா மற்றும் துணை செவிலியர்களுக்கு கூடுதலான ஊக்கத்தொகை அளிக்கப்பட வேண்டும். களத்தில் இருக்கும் குழுவினர்களைப் பொறுத்து தனி நபர் பாதுகாப்பு உபகரணம் பற்றிய வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு மாநிலங்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மாநிலங்கள் தங்களது வலிமையை அதிகரித்துக் கொள்ள தொண்டு நிறுவனங்கள், சுயஉதவிக்குழுக்கள், தனியார் மருத்துவமனைகள், தன்னார்வக்குழுக்கள் ஆகியவற்றின் உதவிகளையும் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. கர்ப்பிணிப் பெண்கள். ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள், முதியவர்கள், ஏற்கனவே நோய் உள்ளவர்கள் போன்ற பாதிப்புக்கு ஆளாகக் கூடிய குழுவினர் மீது சிறப்பு கவனம் செலுத்துமாறும், மாவட்டங்களில் அங்கன்வாடிப் பணியாளர்களையும் ஈடுபடுத்துமாறும் மாநிலங்களிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவை குறித்து பரிசோதிக்கப்பட வேண்டும் மற்றும் தேவைப்படும் குழந்தைகளை ஊட்டச்சத்து மறுவாழ்வு மையங்களுக்கு பரிந்துரைக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற காணொலி மூலம் நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விரிவான கருத்துகளின் அடிப்படையில் தொடர் நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x