கடந்த நிதியாண்டின் 4-வது காலாண்டில் 1.2 சதவீதம் மட்டுமே ஜிடிபி வளர்ச்சி இருக்கும்: எஸ்பிஐ ஆய்வில் கணிப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கடந்த 2019-20 ஆம் நிதியாண்டின் கடைசி மற்றும் 4-வது காலாண்டில் (2020 ஜனவரி முதல் மார்ச் வரை) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 1.2 சதவீதம் மட்டுமே இருக்கும் என்று எஸ்பிஐ வங்கி கணித்துள்ளது.

மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் கரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்ததால், லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு பொருளாதார நடவடிக்கை ஸ்தம்பித்தது. இதனால் கடந்த நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் 1.2 சதவீதம் அளவுக்கு மட்டுமே வளர்ச்சி இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த நிதியாண்டுக்கான ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி குறித்த அறிவிப்பை இன்னும் மத்திய அரசு அறிவிக்கவில்லை. வரும் 29-ம் தேதி தேசிய புள்ளியல் அலுவலகம் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.2 சதவீதமாகவே இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. முன்பு 5 சதவீதம் என மதிப்பிடப்பட்ட நிலையில் 4.2 சதவீதமாகச் சரியக்கூடும்.

கடந்த நிதியாண்டின் 3-வது காலண்டில் கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார வளர்ச்சி 4.7 சதவீதமாகச் சரிந்தது. முதல் காலாண்டில் 5.1சவீதமாகவும், 2-வது காலாண்டில் 5.6 சதவீதமாகவும் இருந்தது. 4-வது காலாண்டின் வளர்ச்சியையும் சேர்த்து மதிப்பிடும்போது 4.2 சதவீதமாகவே இருக்கும் எனத் தெரிகிறது. கடந்த நிதியாண்டின் மார்ச் மாதத்தில் கடைசி ஒருவாரம் கரோானா லாக்டவுனால் பாதிக்கப்பட்டதால் ஏறக்குறைய ரூ.1.40 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஆனால் நடப்பு நிதியாண்டு (ஏப்ரல் 2020-21) தொடங்கியதிலிருந்து கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட லாக்டவுனால் பொருளாதார வளர்ச்சி ஸ்தம்பித்துப்போனது. லாக்டவுனில் மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தாலும் இன்னும் முழுமையாக பொருளாதாரச் சக்கரம் சுழலவில்லை. இதனால் நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (-)6.8 சதவீதமாக வீழ்ச்சி அடையும் என எஸ்பிஐ-எகோரய் ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.

கரோனா சிவப்பு மண்டலத்தில்தான் பெரும்பாலான முக்கியத் தொழில்கள், தொழிற்சாலைகள் அடங்கிய மாவட்டங்கள் அமைந்துள்ளன. அங்கு இன்னும் பொருளாதார இயல்பு நிலை திரும்பாததால், அதன் மூலம் 50 சதவீத இழப்பு ஏற்படும். ஆரஞ்சு, சிவப்பு மண்டலத்தின் மூலம் ஏற்படும் இழப்பு 90 சதவீதமாக இருக்கும்.

மாநிலங்கள் அடிப்படையில் பொருளாதார வளர்ச்சியில் மகாராஷ்டிரா மூலம் 15.6 பங்களிப்பு இழப்பும், அதைத் தொடர்ந்து தமிழகத்தின் மூலம் 9.4 சதவீதம் இழப்பும், குஜராத் மாநிலத்தால் 8.6 சதவீத இழப்பும் ஏற்படும். ஜூன் மாத இறுதியில் எப்போது வேண்டுமானாலும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை உச்சத்தை எட்டும். அதாவது ஜூன் 20-ம் தேதிக்கு மேல் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உச்சத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை அனைத்தும் தற்போதுள்ள நிலையை அடிப்படையாக வைத்துதான் கணக்கிடப்படுகிறது என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in