Last Updated : 26 May, 2020 05:23 PM

 

Published : 26 May 2020 05:23 PM
Last Updated : 26 May 2020 05:23 PM

கேரளாவில் பாம்பை விட்டுக் கடிக்கச் செய்து மனைவியைக்கொன்ற வழக்கு: பாம்புக்கு பிரேதப் பரிசோதனை, டிஎன்ஏ சோதனைக்கு முடிவு

கேரள மாநிலம் கொல்லத்தில் தன் மனைவி உத்ராவை (25), பாம்பை விட்டு கடிக்கச் செய்து கொடூரமான முறையில் கொலை செய்ததாகக் கணவன் சூரஜ் ஒப்புக் கொண்ட வழக்கில் கடித்த பாம்பின் பிரேதப் பரிசோதனை நடைபெற்று வருவதாகவும், பாம்பின் டி.என்.ஏவையும் எடுத்துச் சோதிக்கப் போவதாகவும் கேரள போலீஸ் தெரிவித்துள்ளது.

சூரஜ், இவர் கேரள மாநிலம் அடூரின் பரக்கோடு பகுதியைச் சேர்ந்தவர். இவரது மனைவி உத்ரா மே 7ம் தேதியன்று கொல்லத்தில் உள்ள அஞ்ச்சலில் பாம்பு கடித்து பலியானார். உத்ரா பாம்பு கடித்து இறக்கும் போது தன் பெற்றோர் வீட்டில்தான் இருந்துள்ளார்.

இந்த விவகாரத்தில் போலீஸாரின் கிடுக்குப் பிடி விசாரணையில் கணவன் சூரஜ் பாம்பை ஏவிவிட்டு கடிக்கச் செய்து தன் மனைவி உத்ராவைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

10,000 ரூபாய் கொடுத்து தெரிந்தவர் மூல்ம 2 பாம்புகளை வாங்கியுள்ளார் சூரஜ். ஏற்கெனவே மார்ச் 2ம் தேதி உத்ராவை பாம்பு கடித்தது , இதனையடுத்து கொல்லத்தில் தன் பெற்றோர் வீட்டுக்குச் சென்று சிகிச்சை பெற்று தேறி வந்தார் உத்ரா. ஆனால் மே 7ம் தேதி ஏ/சி படுக்கையறையில் உத்ராவை மீண்டும் பாம்பு கடித்தது. ஆனால் இம்முறை உத்ரா தப்ப முடியவில்லை, பலியானார். இருமுறை உத்ராவைப் பாம்பு கடித்த போதும் கணவர் சூரஜ் அருகில் இருந்தது உத்ராவின் பெற்றோரிடத்தில் வலுவான சந்தேகத்தை ஏற்படுத்தியது.

உத்ராவின் சொத்து மீது கணவர் சூரஜ் குறிவைத்ததாகவும் தாங்கள் மகளுக்கு கல்யாணத்தின் போது அளித்த நகைகள் காணாமல் போனதாகவும் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். பிறகு விசாரணையில் பேங்க் லாக்கரை சூரஜ் மார்ச் 2ம் தேதியே திறந்தது தெரியவந்துள்ளது.

பாம்புகளைக் கையாள்வதில் சூரஜ் பயிற்சி பெற்றார் என்றும் இது தொடர்பாக யூடியூப் சானல்களை அவர் பார்த்ததாகவும் போலீசார் கண்டுபிடித்தனர். பிப்ரவரி 26ம் தேதியன்று பாம்பு பிடிக்கும் சுரேஷ் என்பவரிடமிருந்து சூரஜ் 5,000 கொடுத்து பாம்பு வாங்கியுள்ளார். இதை பிளாஸ்டிக் கண்டெய்னரில் போட்டு வீட்டில் வைத்திருக்கிறார். மேலும் மனைவி உத்ரா முதல் முறை பாம்புக்கடியால் துடித்த போது மருத்துவமனை சிகிச்சையை கணவர் சூரஜ் தாமதப்படுத்தியுள்ளார். ஆனால் கொல்லம் மருத்துவமனையில் சிகிச்சையில் தேறினார் உத்ரா, பிறகு தன் தாய்விட்டுக்குச் சென்றுள்ளார்.

முதல் முயற்சியில் தோல்வியடைந்ததால் ஆத்திரத்துடன் இருந்த கணவன் சூரஜ், மீண்டும் ஏப்ரல் 24ம் தேதி பாம்பு ஒன்றை சுரேஷிடமிருந்து ரூ.5000 கொடுத்து வாங்கியுள்ளார். இதனை மே 7ம் தேதி இரவு 2.30 மணியளவில் தன் பிளாஸ்டிக் கண்டெய்னரிலிருந்து எடுத்து உத்ரா தூங்கிக் கொண்டிருந்த போது காலடியில் நைசாக விட்டுள்ளார் கொடுமைக்கார சூரஜ். பாம்பு உத்ராவின் உயிரைப் பறித்தது.

இந்தக் கொலை தொடர்பாகக் கணவர் சூரஜ், சுரேஷ் மற்றும் இன்னொருவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரிக்கும் டிஜிபி இதனை ‘விசித்திரமானது, அசாதாரணமானது’ என்று வர்ணித்தார். எனவே இதனை விஞ்ஞானபூர்வ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றார்.

பாம்பின் டி.என்.ஏ பரிசோதனைக்கான வசதி கேரளாவில் இல்லாததால் சென்னையிலோ ஹைதராபாத்திலோதான் செய்ய முடியும். ஏனெனில் இது முக்கிய ஆதாரமாகும் என்கிறார் டிஜிபி.

முதல் முறையாக ஒரு கொலை தொடர்பாக பாம்பின் டி.என்.ஏ. சோதனை செய்யப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x