

ஏழு மாநிலங்கள் வழியாக சுமார் 1,400 கி.மீ. நீளம் பாயும் யமுனை நதியில் வழியெங்கும் தொழிற்சாலை கழிவுகள் கலக்கின்றன. ஹரியாணாவின் பானிபட் முதல் டெல்லி வரை மட்டும் 300-க்கும் மேற்பட்ட ஆலைகள் தங்கள் கழிவுகளை யமுனையில் விட்டு, நாட்டில் மிகவும் மாசுபட்ட நதியாக மாற்றிவிட்டன.
இந்நிலையில் ஊரடங்கால் தொழிற் சாலைகள் மற்றும் பிற வர்த்தக செயல்பாடுகள் முடங்கியதால், யமுனை நீர் சுத்தமாகியுள்ளது. இதுகுறித்து டேராடூனில் உள்ள இந்திய வன உயிரின கல்வி நிறுவனத்தின் வனப் பாதுகாப்பு அதிகாரி ராஜீவ் சவுகான் கூறும்போது, “கடந்த 2000-ம் ஆண்டு முதல் யமுனை செயல் திட்டத்தில் இணைந்து செயல்பட்டு வருகிறேன். இவ்வளவு சுத்தமான நீரை நான் இதுவரை பார்த்ததில்லை. உ.பி.யின் இட்டாவா நகரில் யமுனை நீர் இன்னும் சுத்தமாக உள்ளது. யமுனை மட்டுமின்றி அனைத்து நதிகளிலும் ஊரடங்கு ஏற்படுத்திய விளைவுகளை கண்டு நான் வியக்கிறேன்” என்றார்.
டெல்லியில் நீராதாரங்களை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள திவான் சிங் கூறும்போது, “யமுனை தனது சுய உயிரியல் திறனைக் கொண்டு தன்னைத் தானே சுத்தப்படுத்திக் கொண்டுள்ளது. இனி ஆலைக் கழிவுகள் மீண்டும் ஆற்றில் கலப்பதை தடுப்பது மாநில அரசுகளின் கடமை” என்றார்.