

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஏறக்குறைய இரண்டு மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன. இதில் சுற்றுலா துறை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 மாதங்கள் முதல் 6 மாதங்களுக்குள் 40 சதவீத நிறுவனங்கள் முற்றிலுமாக மூடப்படும் நிலைக்கு தள்ளப்படும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
ஏறக்குறைய 36 சதவீத நிறுவனங்கள் தற்காலிகமாக மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக பூட் சுற்றுலா டிராக்கர் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஐஏடிஓ, டிஏஏஐ, ஐசிபிபி, ஓடிடிஓஐ, ஓடிஓஏஐ, ஏடிஓஏஐ, எஸ்ஐடிஇ உள்ளிட்ட சுற்றுலா நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாகும் என்று தெரிகிறது.
கடந்த இரண்டு மாதங்களில் 81 சதவீத சுற்றுலா நிறுவனங்களின் வருமானம் முற்றிலுமாக அதாவது பூஜ்ய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 15 சதவீத நிறுவனங்களின் வருமானம் 75 சதவீத அளவுக்கு குறைந்துள்ளதாக தெரிகிறது.
ஏறக்குறைய 2,300 சுற்றுலா சார்ந்த நிறுவனங்களில் ஆன்லைன் மூலமாக 10 நாட்களாக நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.
67 சதவீத நிறுவனங்கள் சுற்றுலாத் துறைக்கு சரக்கு மற்றும் சேவை வரியை 5 சதவீத அளவுக்குக் குறைக்க வேண்டும் என்றும் 54 சதவீத நிறுவனங்கள் கடனுக்கான அசல் மற்றும் வட்டியை செலுத்த ஓராண்டு அவகாசம் தர வேண்டும் என்றும் கோரிக்கையை வைத்துள்ளன.