ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்துக்கு வாய்ப்பு: வெங்கய்ய நாயுடு

ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்துக்கு வாய்ப்பு: வெங்கய்ய நாயுடு
Updated on
1 min read

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதாவை நிறைவேற்ற, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டும் வாய்ப்புள்ளதாக மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறினார்.

இதுகுறித்து அவர் பாட்னாவில் வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஜிஎஸ்டி மசோதா, நிலம் கையகப்படுத்தும் மசோதா மற்றும் வரிவிதிப்பு தொடர்பாக பிற மசோதாக்களை நிறைவேற்றுவது அவசியம். இதற்காக நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு அடுத்த மாதம் கூட்டும் வாய்ப்புள்ளது.

முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தை கூட்டும் திட்டமில்லை. இந்த மசோதாக்களில் பெரும்பாலானவை சட்டத்திருத்த மசோதாக்களே. எனவே இவை இரு அவைகளிலும் தனித்தனியே நிறைவேற்றப்படும்.

முக்கிய மசோதாக்களில் எதிர்க்கட்சிகளுடன் ஒருமித்த கருத்தை எட்ட மத்திய அரசு அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டது. இதனாலேயே பெரும்பாலான மசோதாக்கள் நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.

எனவே ஜிஎஸ்டி மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். நாட்டை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டுவருவதில் மத்திய அரசு வெற்றி பெற்றுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தக்கவைத்துக் கொள்ள ஜிஎஸ்டி மசோதா நிறைவேறுவது அவசியம்.

இவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in