

இந்தியா- சீனா எல்லையில் உள்ள லடாக்கின் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனா தனது படைவீரர்களை குவித்துள்ளதால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
லடாக் யூனியன் பிரதேசம் பாங்காங் சோ, கல்வான் நல்லா, டெம்சோக் பகுதிகள் பதற்றமாக உள்ளன. சிக்கிம், லடாக் பகுதிகளுக்கு கூடுதலாக படை வீரர்கள் அனுப்பப்படுகின்றனர். கல்வான் பள்ளத்தாக்கு நெடுகிலும் 3 அல்லது4 இடங்களில் சீன வீரர்கள் முகாமிட்டுள்ளனர். இந்த பகுதிக்கு அருகேதான் ராணுவத்துக்கு மிக முக்கிய இணைப்பாக உள்ள சாலை செல்கிறது என்றும் அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த இடங்களி்ல் முகாமிட்டுள்ள சீன படைவீரர்கள் கூடாரங்கள் அமைத்துள்ளதுடன் பதுங்கு குழிகளையும் அமைத்துள்ளனர் என கூறப்படுகிறது. பாங்காங் பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் ஊடுருவல் பிரச்சினையால் இந்திய - சீன வீரர்களுக்கு இடையே மோதல் மூண்டது. அதிலிருந்து பதற்றம் அதிகரித்துவருகிறது. இதனிடையே இந்த பகுதியின் பல இடங்களில் இருதரப்புக்கும் இடையே மோதல் மூள்வது கவலை அளிப்பதாக இந்த இடத்தில் முன்பு பணியாற்றிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கிழக்கு லடாக்பகுதியின் பாங்காங் சோ, கல்வான் நல்லா, டெம்சோக் ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் கைகலப்பு நிகழ்வது பெருத்த கவலை தருகிறது என்றும் அவர் சொன்னார்.
வழக்கமாக உள்ளூரில் கைகலப்பு நிகழ்ந்தால் அந்த பகுதிக்கு உட்பட்ட அளவிலேயே பேசி சமரசம் செய்யப்படுகிறது. இப்போதைய நிலவரம் அப்படிப்பட்டதல்ல. சீனாவின் மேலிடத் தூண்டுதலில் திட்டமிட்டு இவை நடத்தப்படுவதாக தெரிகிறது. எனவே இந்தப் பிரச்சினையை அரசியல் ரீதியாகவும் தூதரக நிலையிலும் அணுகி தீர்வுகாண வேண்டும் என்று வடக்கு பகுதி ராணுவ முன்னாள் தளபதிதெரிவித்துள்ளார். இதனிடையே, இப்படியொரு பதற்ற நிலவரங்களுக்கு தீர்வு காண அதற்கெனதனி வழிமுறை வகுக்கப்பட்டுள்ளது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
எல்லை பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக 2019 டிசம்பர் 21-ம்தேதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோர் கடைசியாக சந்தித்துப் பேசினர். இந்த மாதம் 5-ம் தேதி பாங்காங் சோ பகுதியிலும் 9-ம் தேதி வடக்கு சிக்கிமில் உள்ள நகு லா பகுதியிலும் இருதரப்பு படைகளுக்கும் இடையே கைகலப்பு நிலவியது. அதிலிருந்து பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்தப் பகுதியில் இந்தியா அமைக்கும் சாலைப்பணியை தடுக்கும் நோக்கில் பெரும் எண்ணிக்கையில் படைவீரர்களை குவித்துள்ள சீனாராணுவ வாகனங்களையும், தளவாடங்களையும் நிறுத்தியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.