இந்தியாவில் கரோனாவுக்கு எதிராக 4 தடுப்பு மருந்துகள்; கிளினிக்கல் சோதனைக் கட்டத்துக்கு அடுத்த 5 மாதத்தில் வரும் : மத்தியஅமைச்சர் தகவல்

மத்திய அமைச்சர் ஹர்ஸ வர்த்தன்: கோப்புப்படம்
மத்திய அமைச்சர் ஹர்ஸ வர்த்தன்: கோப்புப்படம்
Updated on
2 min read

கரோனா வைரஸுக்கு எதிராக இந்தியாவில் 14 தடுப்பு மருந்துகள் ஆய்வுகளில் இருக்கும் நிலையில்அதில் 4 தடுப்பு மருந்துகள் அடுத்த 3 முதல் 5 மாதங்களில் கிளினிக்கல் கட்டத்துக்கு வந்துவிடும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஸவர்தன் தெரிவித்தார்.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்த்தன், காணொலி மூலம் பாஜக செய்தித்தொடர்பாளர் ஜிபிஎல் நரசிம்ம ராவுடன் கலந்துரையாடினார். அப்போது கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இந்தியாவின் முயற்சிகள் குறித்து நரசிம்ம ராவ் கேள்வி எழுப்பினார்.

அதற்கு மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் அளித்த பதிலில் கூறியதாவது:

ஒட்டுமொத்த உலக நாடுகளும் கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும்முயற்சியில் ஈடுபட்டுள்ளன, அந்த வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியில் நாடுகள் தீவிரமாக இருக்கின்றன

அந்த முயற்சியில் உலகம் முழுவதும் 100 வகையான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் பல்வேறு கட்டங்களை எட்டியுள்ளன. இதற்கான முயற்சிகள் அனைத்தையும், உலக சுகாதார அமைப்பு ஒருங்கிணைத்து வருகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் பங்களிப்பை அளித்து வருகிறது. தற்போதுவரை 14 வகையான தடுப்பு மருந்துகளை கண்டுபிடிப்பதில் ஆய்வி்ல்இறங்கி அதில் பல்வேறு கட்டங்களை அடைந்துள்ளது. மத்திய அறிவியல்துறை அமைச்சகம் உயிரிதொழில்நுட்ப பிரிவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அளித்து வருகிறது. நிதியுதவி, நிர்வாக ரீதியான உதவிகளை தடுப்பு மருந்து கண்டுபிடித்து வரும் நிறுவனங்களுக்கு அரசு தாராளமாக அளித்து வருகிறது

இ்ந்த 14 தடுப்பு மருந்துகளில் 4 தடுப்பு மருந்துகள் அடுத்த 3 முதல் 5 மாதங்களில் கிளினிக்கில் கட்டத்துக்கு நகர்ந்துவிடும். இப்போது இந்த 4 தடுப்பு மருந்துகளும் கிளினிக்கல் கட்டத்துக்குள் நுழைவதற்கான முதல்கட்டத்தை எட்டியுள்ளன

தடுப்பு மருந்து எப்போது கண்டுபிடிக்கப்படும் என கணிப்பது கடினம். ஆனால், ஒரு மருத்துவராக நான் சொல்வது என்னவென்றால், அதற்கான முயற்சிகளில் இருக்கிறோம், குறைந்தபட்சம் ஓர் ஆண்டு தேவைப்படும் என நினைக்கிறேன். இன்னும் கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை, ஆதலால், மக்கள் சமூக தடுப்பு மருந்துகளான முகக்கவசம், சமூக விலகலை அதுவரை கடைபிடிக்க வேண்டும்

மத்திய அரசும், தனியார் நிறுவனங்களும் கரோனா தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியி்ல் ஈடுபட்டுள்ளன. இந்த நிறுவனங்களுக்குஉதவ பிஎம்கேர்ஸ் நிதியிலிருந்து பிரதமர் மோடி ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளார்.

இவ்வாறு ஹர்ஷ வர்த்தன் தெரிவித்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in