

கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் கடந்த 60 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை இன்று தொடங்கியது. அதிகாலை விமானங்கள் முதலில் டெல்லி-புனே இடையேயும், மும்பை-பாட்னா இடையேயும் இயக்கப்பட்டன என்று விமானப் போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு கடந்த மார்ச் 25-ம் தேதி லாக்டவுனை அறிவித்தது. அது முதல் இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. சிறப்பு விமானங்களும், சரக்கு விமானங்களும் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்குப் பின் 25-ம் தேதி (நாளை) உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த உள்நாட்டு விமானச் சேவையில் நாடு முழுவதும் 870 விமானங்கள் இயக்கப்படலாம் எனத் தெரிகிறது.
உள்நாட்டு விமானங்களை இயக்குவதில் மாநிலத்துக்கு மாநிலம் பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தன. பயணிகளை தனிமைப்படுத்தலாமா அல்லது வீட்டில் தனிமைப்படுத்தலாமா போன்ற கேள்விகளால் பெரும் குழப்பம் நிலவியது. சில மாநிலங்களில் உள்நாட்டு விமான சேவை இன்னும் தொடங்க அனுமதிக்கப்படவில்லை, மும்பை, ஆந்திராவில் குறைவான விமானங்களே இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
இதனால் பல்வேறு களேபரங்களுக்கு மத்தியில் இன்று அதிகாலை 4.45 மணிக்கு டெல்லியிலிருந்து இன்டிகோ நிறுவன்தின் விமானம் புனே நகருக்குஇயக்கப்பட்டது. காலை 6.45 மணிக்கு மும்பையிலிருந்து பாட்னா நகருக்கு முதல் விமானம் இயக்கப்பட்டது.
டெல்லி இந்திராகாந்தி விமானநிலையத்திலிருந்து 6E643என்ற பயணிகள் விமானம் முதலில் புறப்பட்டது. இதில் மாணவர்கள் , புலம்பெயர்ந்தவர்கள், துணை ராணுவப்படையினர், ராணுவ வீரர்கள் என பலரும் பயணித்துள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமானம் முதல் விமானமாக டெல்லிக்கு இயக்கப்படுகிறது. இ்ந்த விமானம் காலை 7.45 மணிக்கு டெல்லி விமானநிலையத்தில் தரையிறங்கும். எஸ்ஜி8194 என்ற பி737 மாடல் விமானம் இயக்கப்படுகிறது
மும்பை சத்ரபதி விமானநிலையத்திலிருந்து பிஹார் தலைநகர் பாட்னாவுக்கு காலை 6.45 மணிக்கு முதல் விமானம் புறப்பட்டது. அதேபோல உத்தரப்பிரதசேம் லக்னோவிலிருந்து முதல் விமானம் புறப்பட்டு மும்பைக்கு காலை 8.20 மணிக்கு இன்டிகோ விமானம் வரவுள்ளது.
பயணிகள் அனைவருக்கும் விமானநிலையத்தில் முறைப்படி அனைத்துப் பரிசோதனைகளும் நடந்தன. பயணிகள் அனைவரும் செல்போனில் ஆரோக்கிய சேது செயலி இருக்கிறதா என அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டனர். சமூக விலகலை கடைபிடித்து நிற்கவும், முகக்கவசம் அணிந்திருக்கவும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டது