Last Updated : 24 May, 2020 06:42 PM

 

Published : 24 May 2020 06:42 PM
Last Updated : 24 May 2020 06:42 PM

சென்னை உள்ளிட்ட 11 மாநகரங்களில் அடுத்த இரு மாதங்களுக்கு சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துங்கள்: மத்திய அரசு அறிவுறுத்தல்

நாட்டில் உள்ள கரோனா நோயாளிகளில் 70 சதவீதத்தைத் தாங்கி நிற்கும் 7 மாநிலங்களில் உள்ள சென்னை உள்ளிட்ட 11 மாநகரங்களில் அடுத்த 2 மாதங்களுக்கு சுகாதாரத்துறை உள்கட்டமைப்பை வலுப்படுத்தத் தயாராக வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை 7 மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மகாராஷ்டிரா, தமிழகம், குஜராத், டெல்லி, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள 11 முக்கிய நகரங்களில் நாட்டில் உள்ள கரோனா நோயாளிகளில் 70 சதவீதம் பேர் இருக்கிறார்கள்.

இந்த 11 மாநகரங்களிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துதல், குடிசைப் பகுதிகளில் கண்காணித்தல், மக்கள் அதிகமாக வசிக்கும் இடங்கள், கரோனா அதிகமாகப் பரவும் திரள் இடங்கள் ஆகியவற்றைக் கண்டறிந்து தீவிரமான சுகாதாரத்துறை கண்காணிப்புக்குள் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசு மாநிலங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் அடுத்த இரு மாதங்களுக்கு 11 நகரங்களில் கரோனா பரவல் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் அதைத் தடுக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட மறைமுக எச்சரிக்கையை மத்திய அரசு விடுத்துள்ளது.

இது தொடர்பாக 7 மாநிலங்களின் சுகாதாரத்துறை செயலாளர்கள், 11 மாநகரங்களின் சுகாதார ஆணையர்கள் ஆகியோருடன் மத்திய சுகாதாரத்துறை செயலர் ப்ரீத்தி சுடான் நேற்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க 11 நகரங்களில் மருத்துவப் பரிசோதனையைத் தீவிரப்படுத்துதல், கரோனா பரவ அதிக வாய்ப்புள்ள பகுதிகளில் சோதனையை அதிகப்படுத்துதல், இறப்பு வீதத்தைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளார்.

ஏனென்றால் கடந்த 3 நாட்களாக இந்தியாவில் கரோனா பாதிப்பு 6 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 6,767 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு பாதிப்பு எண்ணிக்கை 1.31 லட்சத்தைக் கடந்துள்ளது. உயிரிழப்பு 3 ஆயிரத்து 867 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதம் இந்த 11 மாநகரங்களில் மட்டும் இருப்பதால் அதைத் தடுக்க தீவிரம் காட்டப்பட்டு ஆலோசனை நடத்தப்பட்டது.

ஒட்டுமொத்தமாகப் பாதிப்புகளின் எண்ணிக்கை, உயிரிழப்பு வீதம், கரோனா இரட்டிப்பாகும் நாட்கள், லட்சத்துக்கு எத்தனை பேருக்கு கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் உறுதியான சதவீதம் ஆகியவை குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது.

இந்த 11 மாநகரங்களில் கரோனா வைரஸ் நோயாளிகள் எண்ணிக்கை இரட்டிப்பாகும் நாட்களை அதிகப்படுத்துவதும், இறப்பு வீதத்தைக் குறைப்பதும் பெரும் சவாலாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தேசிய அளவிலான சராசரியைக் காட்டிலும் இந்த 11 நகரங்களில் கரோனா உறுதி செய்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

11 மாநகரங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை, நோய்த்தொற்று திரள் இருக்கும் பகுதி, தனிமை முகாமில் செய்துவரும் பணிகள் குறித்து அதிகாரிகள் சார்பில் விளக்கப்பட்டது. வீட்டுக்கு வீடு பரிசோதித்தல், தடுப்புப் பணிகள், கரோனா நோயாளிகளுடன் தொடர்பு வைத்தவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்துதல், கரோனா நோயாளிகளுக்கான சிகிச்சை முறைகள் குறித்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

கரோனா பாதிப்பு இருக்கும் திரட்சிப் பகுதிகளில் (சாரி) நுரையீரல் தொடர்பான நோய்களைக் கொண்டிருக்கும் நோயாளிகளைக் கண்டறிந்து கண்காணித்தல், இன்ப்ளூயன்ஸா காய்ச்சலைக் கண்டறிதல் போன்றவைவற்றைச் செய்து, அவர்களைத் தனிமைப்படுத்தி, கைகள் சுத்தம் குறித்து அறிவுத்தவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.

அடுத்த இரு மாதங்களுக்குத் தேவையான சுகாதாரக் கட்டமைப்புகளைத் தயார் செய்து கொள்ள வேண்டும், குறிப்பாக தனிமைப்படுத்தும் படுக்கைகள், ஆக்ஸிஜனுடன் கூடிய படுக்கைகள், வென்டிலேட்டர்கள், ஐசியூவுடன் கூடிய படுக்கைகளைத் தயார் செய்யவும் மாநிலங்களுக்கு உத்தரவிடப்பட்டது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மேலும் கூறியதாவது:

''தேவைப்பட்டால் மாநில அரசுகள், தனியார் ஆய்வுக்கூடங்களுடன் கூட்டாகச் சேர்ந்து மாதிரிகளை சேகரித்தல், படுக்கை வசதிகளைப் பகிர்ந்து கொள்ளுதல், கரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுத்தப்படுத்துதல், கழிவு மேலாண்மை, முகாம்களைப் பராமரித்தல், மேலாண்மை செய்தல், விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபடுதல் போன்றவற்றைச் செய்யலாம்.

குறிப்பாக உள்ளூர் மொழிகளில் மக்களுக்குப் புரியும் வகையில் சமூகத் தலைவர்கள், இளைஞர் குழுக்கள், தன்னார்வ நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் ஆகியவற்றைக் கண்காணிப்புப் பணியிலும், விழிப்புணர்வுப் பணியிலும் களமிறக்கி கரோனாவைக் கட்டுப்படுத்தலாம்

இந்த 11 மாநகரங்களில் வாழும் முதியோர், நீண்டகாலத் தொடர் நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை எடுத்து வருவோர், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள், ஆகியோர் இருக்கும் பகுதிகளில் கூடுதல் கவனமும், பிரசோதனையும் நடத்தப்பட்டு, இறப்பு விகிதத்தைக் குறைக்க வேண்டும்.

பல்வேறு மாநில அரசுகல் 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையைத் தொடங்கியுள்ளன. அதேபோல மற்ற மாநிலங்களும் தொடங்கி, மக்களுக்கு உதவிகள், ஆலோசனைகள் மட்டும் வழங்காமல் பல்வேறு வசதிகளையும், கோவிட்-19 மேலாண்மைப் பணிகளையும் செய்ய வேண்டும்''.

iவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x