Last Updated : 24 May, 2020 09:21 AM

 

Published : 24 May 2020 09:21 AM
Last Updated : 24 May 2020 09:21 AM

சிக்கியது சிக்கிம்: 60 நாட்களாக கரோனா பாதிப்பிலிருந்து தப்பிய நிலையில் முதல் நபருக்கு தொற்று

நாடு முழுவதும் கரோனாவால் மாநிலங்கள் பாதிக்கப்பட்டு நாள்தோறும் நோயாளிகள் புதிதாக உருவாவது, உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது என்ற நிலையில் கரோனாவை தங்கள் மாநிலத்துக்குள் விடாமல் தற்காத்து வந்தது சிக்கிம். ஆனால், லாக்டவுன் அறிவித்து 60 நாட்களுக்குப் பின் முதல் நபருக்கு கரோனா பாதிப்பு அங்கு ஏற்பட்டுள்ளது

கரோனாவின் பிறப்பிடமான சீனாவின் வடபகுதி எல்லையில் அமைந்திருக்கும் சிக்கிம் இதுநாள்வரை கரோனா வைரஸால் பாதிப்பு ஏற்படாமல் மக்களைப் பாதுகாத்து வந்தது. கரோனா வைரஸ் தோன்றிய வூஹானுக்கும், சிக்கிம் மாநிலத்துக்கும் 2,500 கி.மீ. தொலைவுதான் இருந்தது என்றாலும் தீவிரமான கட்டுப்பாடுகள், கண்காணிப்பு, சமூக விலகல், சுகாதார நடவடிக்கை போன்றவற்றால் கரோனாவிலிருந்து சிக்கிம் தப்பித்து வந்தது.

சிக்கிம் மாநிலத்துக்கு ரயில் போக்குவரத்து இல்லாத காரணத்தால் விமானம், சாலை வழியாக மட்டுமே அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் செல்ல முடியும். இதனால் கடந்த ஜனவரி 29-ம் தேதி முதலே சிக்கிம் அரசு மாநிலத்தின் 7 எல்லைப் பகுதிகளையும் மூடி சீல் வைத்துக் கண்காணித்து வந்தது. அங்குள்ள அனைத்து மாவட்டங்களிலும் தனிமை முகாமை ஏற்படுத்தி மாநிலத்துக்குள் வருபவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக் கண்காணிக்கப்பட்டு வந்தனர்.

மற்ற மாநிலங்களைப் போல் ஊரடங்கில் தளர்வு காட்டாமல், தீவிரமாக சிக்கிம் ஊரடங்கைப் பின்பற்றியது. சிக்கம் மாநில உயர் நீதிமன்றத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதி குடும்பத்தாருடன் அங்கு சென்றார். இதற்காக சிறப்பு அனுமதியும் நீதிபதி பெற்றிருந்தார். ஆனால், ராங்போ எல்லைப் பகுதிக்கு வந்த நீதிபதியையும் குடும்பத்தாரையும் கோட்டாட்சியர் உள்ளே விடாமல் தனிமை முகாமுக்கு அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் கடந்த 60 நாட்களாக கரோனாவின் பாதிப்பு இல்லாமல் இருந்த சிக்கிம் மாநிலத்தில் நேற்று முதல் நபருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டில் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 1.25 லட்சத்தைக் கடந்து சென்றுள்ள நிலையில் சிக்கிம் மாநிலத்தில் முதல் நபர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

25 வயது மாணவர் ஒருவர் டெல்லியிலிருந்து கடந்த 21-ம் தேதி சிக்கிம் வந்துள்ளார். அவருக்கு கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டதில் அவருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தத் தகவலை சுகாதாரத்துறை செயலர் பெம்பா ஷெரிங் பூட்டியா தெரிவித்தார்.

சிக்கிம் மாநிலத்தின் ராபங்களா மாவட்டத்தைச் சேர்ந்த அந்த 25 வயது மாணவருக்கு ஸ்ரீ துடோப் நாம்யால் நினைவு மருத்துவமனையி்ல் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராவதற்காக டெல்லியில் ஒரு கல்வி நிறுவனத்தில் அந்த மாணவர் படித்து வருகிறார். கரோனா பாதிப்பு டெல்லியில் அதிகரித்ததைத் தொடர்ந்து டெல்லியிலிருந்து பேருந்து மூலம் சிலிகுரி வந்து, அங்கிருந்து மற்றொரு பேருந்து மூலம் சிக்கிம் எல்லைக்கு அந்த மாணவர் வந்து சேர்ந்தார்.

அந்த மாணவர் தனிமை முகாமில் இருந்தபோது கடந்த 21-ம் தேதி கரோனா அறிகுறிகள் அவருக்குக் காணப்பட்டன. இதையடுத்து, அந்த மாணவருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டதில் அவருக்குக் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் பிசிஆர் டெஸ்ட் எடுக்கப்பட்டு, வடக்கு வங்காள மருத்துவக் கல்லூரிக்குச் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதில் கரோனா தொற்று உறுதியானது.

இந்த மாணவருடன் பேருந்தில் பயணம் செய்தவர்கள், பேருந்து ஓட்டுநர் உள்பட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். முதலில் இந்த மாணவருக்கு அறிகுறியுடன் கரோனா இருந்த நிலையில் இப்போது அறிகுறி இல்லாமல் இருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x