

வெளிமாநிலத் தொழிலாளர்கள் விவகாரத்தை மத்திய – மாநிலஅரசுகள் சிறப்பாக கையாண்டிருக்க வேண்டும் என நிதி ஆயோக்தலைவர் அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.
நிதி ஆயோக் அமைப்பின் தலைவர் அமிதாப் காந்த் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது வெளிமாநில தொழிலாளர் பிரச்சினை குறித்த கேள்விக்கு அவர் கூறியதாவது:
இந்திய அரசு நீண்ட காலமாக மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்களின் விளைவாக,இன்று நாடு முழுவதும் லட்சக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள் உருவாகியுள்ளனர். எனவே இதுபோன்ற பேரிடர் காலங்களில் அவர்களின் நலனைப் பாதுகாப்பது என்பது மிகப்பெரிய சவாலான காரியம்தான். அதேநேரம் அவர்களை பாதுகாக்க வேண்டியதும் அரசின் கடமை என்பதை மறந்துவிடக் கூடாது.
ஆனால், வெளிமாநிலத் தொழிலாளர்கள் விவகாரத்தை மத்திய, மாநில அரசுகள் சரியாககையாளவில்லை. குறிப்பாக, மாநில அரசுகள் இதில் அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஏனெனில், இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் மத்திய அரசின் அதிகாரம் குறிப்பிட்ட வரையறைக்குள் மட்டுமே இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.