

கரோனா வைரஸ், லாக்டவுன் ஆகிய நெருக்கடிகளுக்கு மத்தியில் புனித ரமலான் நோன்பை சமூக விலகலுடன் கடைப்பிடித்த முஸ்லிம் மக்கள் நோன்புக் காலம் முடிந்ததையடுத்து கேரளா, ஜம்மு காஷ்மீரில் மட்டும் புனித ரமலான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. நாட்டின் மற்ற மாநிலங்களில் நாளை கொண்டாடப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 24-ம் தேதி மாலை புனித ரமலான் நோன்பை முஸ்லிம் மக்கள் கடைப்பிடிக்கத் தொடங்கினார். 30 நாட்கள் நோன்பு முடிந்துள்ள நிலையில் இன்னும் பிறை தெரியவில்லை. கேரளா, ஜம்மு காஷ்மீர் மாநிலம் தவிர்த்து, தமிழகம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் திங்கள்கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இதுகுறித்து டெல்லியின் ஜும்மா மசூதியின் இமாம் அகமது ஷா புகாரி கூறுகையில், “இன்னும் வானில் பிறை காணப்படாததால் திங்கள்கிழமை ரமலான் பண்டிகையை அனைவரும் கொண்டாடலாம்” எனத் தெரிவித்தார்.
ஆனால், வளைகுடா நாடுகளில் இன்று புனித ரமலான் பண்டிகை கொண்டாடுவதைப் பின்பற்றி கேரளாவும், ஜம்மு காஷ்மீர் மாநிலமும் இன்று ரமலான் பண்டிகையைக் கொண்டாடுகின்றன.
ஸ்ரீநகரில் உள்ள பெரிய மசூதி இமாம் நசிர் உல் இஸ்லாம் கூறுகையில், “ஜம்மு காஷ்மீரில் பிறை தென்பட்டதால் ஞாயிற்றுக்கிழமை புனித ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சிவப்பு மண்டலத்தில் உள்ள மக்கள் வீட்டிலேயே சமூக விலகலைக் கடைப்பிடித்து தொழுகை நடத்த வேண்டும்.
பச்சை மண்டலங்களில் உள்ள மக்கள் மசூதிக்குச் செல்லாமல் தொழுகைக்கான இடத்தில் நமாஸ் செய்யலாம். தொழுகை நடத்தும்போது மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும். 10 முதல் 20 நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது” எனத் தெரிவித்தார். கேரள மாநிலத்திலும் இன்று புனித ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
டெல்லியில் உள்ள ஜாமியத் உலேமா இ ஹிந்த் வெளியிட்ட அறிக்கையில், “ருயத் இ ஹிலால் குழு, இம்ரத் இ ஷரையா ஹிந்த் கூட்டம் நடந்தது. வானில் பிறை தென்படாததையடுத்து, திங்கள்கிழமை நாடு முழுவதும் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்படுகிறது.
மக்கள் அனைவரும் சமூக விலகலைக் கடைப்பிடித்து, லாக்டவுன் விதிமுறைகளைப் பின்பற்றி, முகக்கவசம் அணிந்து தொழுகை நடத்த வேண்டும். பண்டிைகயைக் கொண்டாட வேண்டும்” என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனித ரமலான் பண்டிகையின்போது மசூதிக்குச் செல்லாமல் முஸ்லிம்கள் பண்டிகையைக் கொண்டாடுவது இதுதான் முதல் முறையாகும்.