Published : 24 May 2020 08:41 AM
Last Updated : 24 May 2020 08:41 AM

ஊரடங்கு அமல்படுத்தாமல் இருந்திருந்தால் 2 லட்சம் பேர் உயிரிழந்திருப்பர்: பாஸ்டன் ஆலோசனைக் குழு ஆய்வில் தகவல்

இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்படாமல் இருந்திருந்தால் சுமார் 2 லட்சம் பேர் வரை உயிரிழந்திருப்பார்கள் என பாஸ்டன் ஆலோசனைக் குழுவின் ஆய்வு தெரிவிக்கிறது.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் மார்ச் 25-ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்திய அரசை விமர்சனம் செய்தனர்.

இந்நிலையில், 2 கட்ட ஊரடங்கு மற்றும் அதன் விளைவுகள் குறித்துஆய்வு செய்த நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் தனது அறிக்கையை தாக்கல் செய்தார்.

அவர் கூறும்போது, "ஏப்ரல் 3-ம் தேதி கரோனா வைரஸால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் தினசரி உயர்வு 22.6 சதவீதமாக இருந்தது. பின்னர் ஏப்ரல் 4 முதல் பாதிப்பு சதவீதம் குறைய ஆரம்பித்தது. இப்போது ஒரு நாளுக்கு புதிய பாதிப்பு 5.5 சதவீதம் என்ற அளவுக்கு குறைந்துள்ளது. மேலும், சுகாதாரக் கட்டமைப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க ஊரடங்கு உதவியுள்ளது" என்றார்.

புள்ளியியல் துறை செயலாளர் பிரவீன் ஸ்ரீவத்சவா கூறும்போது, "ஊரடங்கு உத்தரவு காரணமாக கரோனா வைரஸ் பரவும் வேகமும் இறப்பு சதவீதமும் குறைந்துள்ளது. இது மத்திய புள்ளியில் துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது.

ஒரு வேளை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தாமல் இருந்திருந்தால் இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 36 லட்சம் முதல் 70 லட்சம் வரையும் உயிரிழப்பு 1.2 லட்சம் முதல்2.1 லட்சம் வரையும் அதிகரித்திருக்கும் என்று பாஸ்டன் ஆலோசனைக் குழு என்ற அமைப்பு கணக்கிட்டுள்ளது. இதுபோல இந்திய பொது சுகாதார நிறுவனம் கணக்கிட்டுள்ளபடி, ஊரடங்கு காரணமாக இந்தியாவில் 78 ஆயிரம் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது" என்றார்.

1 லட்சம் பேர் மட்டுமே பாதிப்பு

மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், உலக சுகாதார அமைப்பின் நிர்வாகக் குழு தலைவராக காணொலி காட்சி மூலம் நேற்றுமுன்தினம் பொறுப்புஏற்றார். அப்போது அவர் பேசும்போது, “கரோனா வைரஸ் பிரச்சினையை நிகரற்ற வகையிலும் தெளிவான வழியிலும் கையாண்டுவருகிறது இந்தியா. இங்கு சுமார் 135 கோடி மக்கள் தொகை இருந்தாலும், கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 1. 18 லட்சம்தான். இந்த தொற்றால் உயிரிழப்பு 3 சதவீதம்தான். இந்த தொற்றிலிருந்து 40 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் குணமாகி உள்ளனர். இந்தியாவில் கிருமி தொற்று எண்ணிக்கை இரட்டிப்பாக 13 நாட்கள் ஆகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x