

லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் யுகவ் மற்றும் ஏசிஐ வேர்ல்டுவைடு நிறுவனங்கள், கூட்டாக நடத்திய ஆய்வில் கூறியிருப்பதாவது:
உலகம் முழுவதும் மூன்றில்ஒரு பங்கு மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனையில் மோசடிக்கு உள்ளாகி உள்ளனர். ஒரு குடும்பத்தில் யாராவது ஒரு நபர் டிஜிட்டல் மோசடிக்கு உள்ளாகி உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 17 சதவீத அளவுக்கு மோசடிகள் நிகழ்ந்துள்ளன.
கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த கொண்டு வரப்பட்ட ஊரடங்கு நடவடிக்கையை தங்களுக்கு சாதகமாக மோசடி பேர்வழிகள் பயன்படுத்திக் கொண்டுள்ளனர் என்று ஏசிஐ வேர்ல்டுவைடு நிறுவனத்தின் தெற்காசிய பிரிவின் துணைத் தலைவர் கவுசிக் ராய் தெரிவித்துள்ளார்.
கரன்சி உபயோகத்தைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதால் டிஜிட்டல் பேமென்ட், கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மற்றும் மொபைல் வாலெட், யுபிஐ அடிப்படையிலான பணம்செலுத்தும் வழிகள் மூலமாக மக்கள் பரிவர்த்தனை மேற்கொள்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார். டிஜிட்டல் பரிவர்த்தனையின் போது மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வையும் மக்களிடையே அதிகம் மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
டிஜிட்டல் பரிவர்த்தனையில் மோசடிகள் அதிகரித்து வருவதால் அது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் டிஜிட்டல் பரிவர்த்தனை மீதான நம்பகத்தன்மை குறைந்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
போலியான செயலிகள், போலிஇணையதள முகவரிகள் உள்ளிட்டவை அதிகரித்து வருவதாகவும், ஸ்பைவேர் உள்ளிட்டவை பெரும் சவாலாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் வங்கிகள் மீதான நம்பகத் தன்மை அதிகம் உள்ளதாகவும், மோசடிக்கு உள்ளானால் உடனடியாக வாடிக்கையாளர்கள் வங்கியுடன் தொடர்பு கொண்டு தங்களது கணக்கை முடக்குமாறு தெரிவித்து விடுவதாக அவர் கூறுகிறார். மேலும் சிலர் காவல்துறையில் சைபர் பிரிவில் புகார்அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.