Published : 24 May 2020 06:46 AM
Last Updated : 24 May 2020 06:46 AM

பொருளாதார திட்டங்களை வங்கிகள் அமல்படுத்த வேண்டும்: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்

கடந்த புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை, ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள பொருளாதார ஊக்குவிப்பு சலுகைத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்தது.

இதன் தொடர்ச்சியாக வங்கி தலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் உரையாடிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தேவைப்படும் கூடுதல் கடனை உடனடியாக வழங்கவலியுறுத்தினார். அத்துடன் கடன்வழங்குவதில் உள்ள ஆவணங்கள்பரிசீலனை நடைமுறைகளை எளிமைப்படுத்தி உடனடியாக வழங்குமாறு கேட்டுக் கொண்டதாக இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் பத்மஜா சந்துரு ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு தெரிவித்தார்.

மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள், அதற்கான சலுகைகள், அதை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதலை வங்கிகளுக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே அளித்துள்ளது. இதில் சிறு, குறுமற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு உடனடியாக கடன் வழங்க உத்தரவாதம் அளிக்கப்பட்ட (இசிஎல்ஜிஎஸ்) திட்டம் மூலம் ரூ.3 லட்சம் கோடியும் அடங்கும்.

ரூ.20 லட்சம் கோடி பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தில் 9.25சதவீத வட்டியில் 100 சதவீத உத்தரவாத்ததுடன் அளிக்கப்பட்ட கடன் உதவி மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று நிர்மலா சீதாராமன்தெரிவித்திருந்தார். தற்போது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் கடனுக்கான வட்டி 9.5 சதவீதத்தில் இருந்து 17 சதவீதம் வரை உள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முதுகெலும்பாகத் திகழ்வது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்தான். நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) இவற்றின் பங்களிப்பு 28 சதவீதமாக உள்ளது. அதேபோல நாட்டின் ஏற்றுமதியில் இத்துறையின் பங்களிப்பு 40 சதவீதமாகும். அத்துடன் இத்துறையின் மூலம் 11 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. வேளாண் துறைக்கு அடுத்தபடியாக அதிக அளவில் வேலை வாய்ப்பு அளிக்கும் துறையாக சிறு, குறு நடுத்தர தொழில்கள் உள்ளன.

மத்திய அரசு அறிவித்துள்ள பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கையால் 45 லட்சம் நிறுவனங்கள் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர, நொடித்து போன சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மீண்டும் கடன் உதவி அளிக்கும் வகையில் ரூ. 20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2 லட்சம் நிறுவனங்கள் பயனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர சிறப்பு நிதியம் ரூ. 50 ஆயிரம் கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவும் இத்துறைக்கு ஊக்குவிப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x