

மத்திய பிரதேசத்தில் பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி)-யில் நிர்வாகியாக இருப்பவர் சிவம் சுக்லா. இவர் தனதுபேஸ்புக் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.
அதில், பத்து ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் புகைப்படத்துக்கு பதில் அவரை கொலை செய்த நாதுராம் கோட்சேவின் படம் கிராபிக்ஸ் முறையில் அச்சிடப்பட்டிருந்தது.
இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனம் எழுந்தது. மேலும், அவரை கைது செய்யக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். இதனிடையே, அவர் மீது காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் சிதி காவல் நிலையத்தில் புகார்அளித்தனர். ஆனால், போலீஸார் இதுதொடர்பாக வழக்கு பதிவுசெய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல் ஆய்வாளர்எஸ்.எம். படேல் கூறும்போது, “பேஸ்புக்கில் வந்த பதிவை வைத்து ஒருவர் மீது வழக்கு பதிவு செய்ய முடியாது. எனினும், இதுகுறித்து விசாரித்துவருகிறோம். தற்போது சம்பந்தப்பட்ட நபர் தலைமறைவாகி உள்ளார். அவரை தேடி வருகிறோம்” என்றார்.