ஆந்திராவின் ராயலசீமா நீரேற்று பாசன திட்டத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை

ஆந்திராவின் ராயலசீமா நீரேற்று பாசன திட்டத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை
Updated on
1 min read

ஆந்திர அரசு உத்தேசித்துள்ள ராயலசீமா நீரேற்று பாசன திட்டத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தெலங்கானா மாநிலம் நாராயண்பேட் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி இந்த திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல கிளை விசாரணைக்கு ஏற்றது.

சுற்றுச்சூழல் துறை ஒப்புதல் பெறாமல் ஆந்திரபிரதேச அரசு இந்த திட்டத்தை தொடங்கியுள்ளது. அதன் செயல் சட்டத்துக்கு புறம்பானது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த விதிகளை மீறியுள்ளது. இந்த திட்டத்தினால் கிருஷ்ணா நதிக்கு ஏற்படக்கூடிய பாதகங்கள் குறித்தும் தெலங்கானா மக்களுக்கு ஏற்படக்கூடிய வாழ்வாதார பாதிப்பு பற்றியும் விரிவாக ஆராயப்படவேண்டும் என்று மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

நீதித்துறை உறுப்பினர் கே. ராமகிருஷ்ணன், உறுப்பினராக இடம்பெற்றுள்ள நிபுணர் சைபால் தாஸ் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தியது.

பின்னர் அந்த அமர்வு பிறப்பித்த உத்தரவில், "இந்த திட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. மேலும் இதுகுறித்து ஆராய குழு அமைக்கப்படுகிறது.இந்த திட்டத்துக்கான நீர் ஆதாரம் எங்கே உள்ளது. இந்த திட்டத்தால் நதி நீர் பகிர்ந்துகொள்ளும் மாநிலங்கள் பாதிப்புக்குள்ளாகுமா, சமூக ரீதியில் பாதகம் வருமா என்பதையும் இந்த குழு ஆராய்ந்து 2 மாதத்தில் அறிக்கை தரும். இந்த திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறையின் முன் அனுமதி தேவையா, இல்லையா என்பது பிரதானமான கேள்வியாகும். ஆந்திர அரசு எந்த நோக்கத்துக்காக இந்த திட்டத்தை தொடங்கியுள்ளது என்ற விவரம் மனுவில் குறிப்பிடப்படவில்லை. மாநில அரசோ அல்லது சம்பந்தப்பட்ட அமைப்பகளோ தான் இதுபற்றி தெரிவிக்க முடியும். எனினும், இந்த திட்டம் தொடக்க நிலையில் இருப்பதால் இந்த தீர்ப்பாயம் நியமித்துள்ள குழு அறிக்கையை எங்களிடம் தாக்கல் செய்யும் காலம் வரை திட்டப் பணிகளை ஆந்திர அரசு தொடரக்கூடாது" என கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in